முரசொலி தலையங்கம்

“இது கையாலாகாத பழனிசாமி அரசு அல்ல.. மேகதாது அணை கட்டுவதை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தும்” : ‘முரசொலி’ !

“எதுவாக இருந்தாலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுப்போம்” என முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

“இது கையாலாகாத பழனிசாமி அரசு அல்ல.. மேகதாது அணை கட்டுவதை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தும்” : ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அணையைக் கட்டி தண்ணீரைத் தடுக்க நினைக்கிறது கர்நாடகம். அணையைத் தடுத்து தண்ணீரை விடுதலை செய்தாக வேண்டும். அந்தக்கடமையும் பொறுப்பும் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. காவிரி என்பது தண்ணீர் மட்டுமல்ல, தமிழகத்தின் உரிமை. அந்த உரிமையைப் பறிப்பதே கர்நாடகத்தின் ஒரே வேலையாக காலம் காலமாக இருந்து வந்துள்ளது. 1968ம் ஆண்டு கர்நாடக அரசு அணைக்கட்டத் தொடங்கியபோது அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சரான கலைஞர் அவர்கள்தான் முதன் முதலாக கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கர்நாடக அரசு ஒத்துழைக்காத நிலையில் 1970ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தவர் முதல்வர் கலைஞர். இதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971ம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றினார்கள். ஹேமாவதி அணை கட்டுவதை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தது தி.மு.க. அரசு. அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் காவிரி உரிமை மீட்கும் முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை.

1989 ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தார்கள். பேச்சுவார்த்தை இனி பயன்படாது, காவிரி நடுவர் மன்றம் அமைத்தாக வேண்டும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினார். தமிழக அரசின் கருத்து எதுவோ, அதை மத்திய அரசின் கருத்தாக உச்சநீதிமன்றத்தில் சொல்ல வைத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைத்தார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். காவிரி நடுவர் மன்றம் சார்பில் இடைக்கால தீர்ப்பு ஒன்றைத் தாருங்கள் என்று சொல்லி இடைக்காலத் தீர்ப்பை வாங்கியவர் முதல்வர் கலைஞர்.

“இது கையாலாகாத பழனிசாமி அரசு அல்ல.. மேகதாது அணை கட்டுவதை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தும்” : ‘முரசொலி’ !

25.6.1991 ஆம் நாள், ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற இடைக்கால தீர்ப்பை வாங்கித் தந்தவர் கலைஞர் அவர்கள். அதன் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 1997 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமையக் காரணமாக இருந்தவரும் முதல்வர் கலைஞர்.

காவிரி இறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் - 2007 ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம்.சி.தான் என்று தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின் படி நீதிமன்றத்துக்கும் போனோம். காவிரி மன்றத்தையும் நாடினோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னோம்.

இந்த இறுதித்தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவை உச்ச நீதிமன்றத்தில் சரி செய்ய முயற்சிக்காமல் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அறிவிக்கையில் வெளியிடுவதை தனது சாதனையாகக் காட்டிக் கொண்டார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதில் இருந்து காவிரி பிரச்சினையில் பின்னடைவு ஏற்பட்டது. கழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைந்து விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் கொண்டு வரவும் அ.தி.மு.க அரசு முயலவில்லை. 2017 ஆம் ஆண்டு ஜூலை 10, செப்டம்பர் 20 ஆகிய இரண்டு நாட்களும் விசாரணை நடந்தது. இங்குதான் பழனிசாமி அரசின் கையாலாகத்தனம் வெளிப்பட்டது. சரியான வாதங்களை வைத்து தமிழக அரசு வாதாடவில்லை.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் உள்ளன.

1. நிலத்தடி நீர் பயன்பாடு காவிரி நதியின் நீர் உபயோகமாகக் கருதக்கூடாது.

2. குடிநீர், தொழிற்சாலை, உள்ளாட்சி ஆகியவற்றுக்காக தண்ணீரை பயன்படுத்தினால் அந்தத் தண்ணீர் அந்தந்த மாநில கணக்கீட்டில் தான் சேர்க்கப்படும். - என்று இறுதித்தீர்ப்பில் உள்ளது. அதை வைத்து தமிழக அரசு வாதங்களை வைக்கவில்லை.

“இது கையாலாகாத பழனிசாமி அரசு அல்ல.. மேகதாது அணை கட்டுவதை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தும்” : ‘முரசொலி’ !

தனக்கு நிலத்தடி நீர் குறைந்துவிட்டதாக கர்நாடக அரசு வாதங்களை வைத்ததை தமிழக அரசு மறுக்கவில்லை. தமிழகத்துக்கு நிலத்தடி நீர் வளம் உள்ளதாகச் சொல்லி 10 டி.எம்.சி குறைக்கப்பட்டதை தமிழக கேள்வி எழுப்பவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் கருத்துருவைச் சொல்லி வாதிடவில்லை பழனிசாமியின் அரசு.

அ.தி.மு.க அரசு தாக்கல் செய்த மனுவுக்கும் அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாதத்துக்கும் முரண்பாடுகள் இருந்தது. எது சரியானது என்று நீதிபதிகளே கேட்டு, மனுவில் சொன்னதே சரியானது என்று அவர்களாக முடிவுக்கு வந்தார்கள். அதன்பிறகு காவிரி உரிமை என்பதே மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் கிளைப்பிரிவு போல ஆகிவிட்டது. இதன் பிறகே தன்னைக் கேட்க யாருமில்லை என்ற முடிவுக்கு கர்நாடகம் வந்துவிட்டது.

ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதத்தை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது கர்நாடகா. இதனை தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து வருகிறோம். இரண்டு நாட்களூக்கு முன்னால் திடீரென்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ‘மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும்' என்று அறிவித்துள்ளார். இந்த தகவல் கிடைத்த உடனே, இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். இது தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது, காவிரியின் அளவை குறைக்கும் முடிவு இது, இருமாநில உறவுக்கும் உகந்தது அல்ல, விவசாயிகளை வஞ்சிப்பது என்று முதலமைச்சர் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

“இது கையாலாகாத பழனிசாமி அரசு அல்ல.. மேகதாது அணை கட்டுவதை தி.மு.க அரசு தடுத்து நிறுத்தும்” : ‘முரசொலி’ !

எடியூரப்பா திடீரென்று இப்படிச் சொல்ல என்ன காரணம்? மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்வது தொடர்பாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தானாகவே முடித்து வைத்திருப்பதுதான் எடியூரப்பாவின் இந்த கருத்துக்குக் காரணம். மேகதாதுவில் அணை கட்டுகிறார்களா என்பதை இந்த தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் அதுவாக தாக்கீது அனுப்பியது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது. ஜூலை 5 ஆம் நாள் இதைப் பற்றி விசாரிக்கப்போவதாகச் சொன்னது. இதில் கர்நாடக அரசு, தனது எதிர்ப்பைக் காட்டியது.

தாக்கீது அனுப்பியது தவறு என்றது. கர்நாடகாவின் நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு கண்டித்தது. இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், இந்த வழக்கை தானாக முடித்து வைத்துக் கொண்டது. அதாவது கர்நாடகம் என்ன சொன்னதோ அதை ஏற்றுக்கொண்டு விட்டது. அதாவது தனக்கான தடை விலகியதாக எடியூரப்பா நினைத்துக் கொண்டுவிட்டார்.

இந்த பின்னணியை மனதில் வைத்துத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணைக் கட்டுவதற்கு அனுமதி தரக்கூடாது என்பதற்கு விரிவான விளக்கத்தை முன் வைத்தார். அதுவும் எடியூரப்பாவை எரிச்சல்படுத்தி இருக்கலாம். கர்நாடக அரசியலில் அவருக்கு சமீபகாலமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை திசை திருப்புவதற்காகவும் இதனை அவர் சொல்லி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுப்போம்!

banner

Related Stories

Related Stories