தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க அறிவிப்பு ஒன்றை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்கள். “வருகிற மார்ச் 7 ஆம் நாள் திருச்சியில் நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சியில் மிக முக்கியமான இலட்சியப் பிரகடனத்தை நான் வெளியிட இருக்கிறேன்! மு.க.ஸ்டாலின் ஆகிய நான், நம் தமிழ்நாட்டின் அடுத்த பத்தாண்டுகளுக்கான எனது தொலைநோக்குப் பார்வையினை வெளியிட இருக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்குள் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பெறக்கூடிய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதற்கான எனது மாபெரும் கனவை அறிவிக்க இருக்கிறேன்.
இதனைச் செயல்படுத்திக்காட்டும் பொறுப்பு என்னுடையது. பத்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் அடையவேண்டிய இலக்கை வரையறுத்துள்ளேன். கடந்த பல மாதங்களாகத் தமிழக மக்களுடன் நான் நடத்திய சந்திப்புகளின் அடிப்படையிலும்; கழக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்களுடன் பலகட்டங்களாக நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையிலும் இத்தொலைநோக்கு அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மார்ச் 7 அன்று திருச்சியிலே நடைபெறும் நிகழ்ச்சியில் இத்தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை நான் வெளியிடுகிறேன். அடுத்த 20 நாட்களில் தமிழகத்திலுள்ள இரண்டு கோடிக் குடும்பங்களிடமும் தமிழகத்துக்கான எனது தொலைநோக்குப் பார்வையினை நமது கழகத் தொண்டர்கள் விரிவான பரப்புரைகளின் வழியே வீடு வீடாக எடுத்துச் செல்வார்கள்!” - என்பதுதான் அந்த அறிவிப்பு. இது தலைவரின் இலக்கு மட்டுமல்ல! அதுதான் தமிழகத்தின் இலக்கும்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்குகள் எப்போதும் வரையறுக்கப்பட்டவை. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு கூடிய திருச்சி மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வரையறுத்துக் கொடுத்தார்கள்.
* அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!
* இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!
* மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி! - என்பதுதான் அந்த ஐம்பெரும் முழக்கங்கள்!
இது அன்றைய தி.மு.க. தலைவரின் முழக்கங்கள் மட்டுமா? தி.மு.க.வின் முழக்கம் மட்டுமா? அதுவே தமிழகத்தின் முழக்கமாக ஐம்பது ஆண்டுகள் தாண்டியும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது!
2018 ஆம் ஆண்டு ஈரோடு மண்டல மாநாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடுத்த கட்டத்துக்கான ஐம்பெரும் முழக்கங்களை வடித்துக் கொடுத்தார்கள்.
* கலைஞரின் கட்டளைகளைக் கண்போல் காப்போம்!
* தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்!
* அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!
* மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!
* வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்! - என்பதுதான் அந்த ஐம்பெரும் முழக்கங்கள்!
இவையே தமிழகத்தின் முழக்கங்களாக விரிவுபெற்று இன்று ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இந்த ஐம்பெரும் முழக்கங்களில் ஐந்தாவதாக இருப்பதுதான் வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்பதாகும். வளர்த்தெடுக்கப் போகும் வழிகளைத்தான் மார்ச் 7ஆம் நாள் தலைவர் அறிவிக்க இருக்கிறார். இப்படி இலக்கை நிர்ணயித்துவிட்டு உழைப்பதுதான் கழகத்தின் பாணி.
கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்: “சமுதாயத்துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக்குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத் தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகள் ஆகும்” - என்றார்.
திராவிட இயக்கத்தின் அடிப்படை இலக்குகள், தி.மு.க. ஆட்சியில் தான் சட்டங்கள் ஆனது. சமூகநீதியாக இருந்தாலும் பெண்ணுரிமையாக இருந்தாலும் அவை சட்டம் ஆனது கழக ஆட்சியால்தான். பொருளாதாரத் துறையில் சமதர்மக் குறிக்கோளை வென்றெடுக்கவே பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் - நெசவாளர்கள் - ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - ஏழைகள் - எளியோர் - ஒடுக்கப்பட்டோர் - விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக தீட்டப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பொருளாதாரச் சமதர்மக் குறிக்கோளைக் கொண்டவைதான்.
அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை - என்ற சொல் இன்றைக்கு அச்சம் தருவதாக இருக்கலாம். ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற முழக்கத்தின் உள்ளடக்கம் இதுதான். ஒரு காலத்தில் திராவிட நாடு கேட்ட காலத்தில் வடிவமைக்கப்பட்டது இது. இக்கொள்கையே, ‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி'யாக மாற்றம் பெற்றது. உண்மையான கூட்டாட்சி மத்தியில் உருவானால், உண்மையான சுயாட்சி மாநிலங்களில் உருவானால் அதுவே இலட்சியத் தமிழ்நாடாக இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். முதல்வர் ஆன அண்ணா அவர்கள், தனது இறுதி உயில் எனச் சொல்லத்தக்க வகையில் மாநில சுயாட்சி குறித்தே அதிகம் எழுதினார்கள்.
இதைத்தான் ‘முழுமையானதும், உண்மையானதுமான கூட்டாட்சித் தத்துவம்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அத்தகைய கலைஞர் அவர்கள் கழகத்துக்கு வடித்துக் கொடுத்த இலக்கணம் என்பது, “தமிழ் இனத்தின் மெய்க்காப்பாளனாகவும், உண்மை ஊழியனாகவும், தீங்கொன்று தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ வருமானால் அதனைத் தாங்காமல் பொங்கி எழுந்து காப்பாற்றத் தயங்காத போர் வீரர் பாசறையாகவும் இருப்பது திராவிட முன்னேற்றக் கழகமே” என்றார். அந்த அடித்தளத்தில் அமைந்ததுதான் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கும் அறிவிப்பு.
தலைவரின் இலக்கு தமிழகத்தின் இலக்காக மாறட்டும்! பத்தாண்டு கால பாதக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு முகிழ்க்க இருக்கும் முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்தை முன்னேற்றும் ஆட்சியாக அமையட்டும்!