மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் ஒலித்து வருகிறது. மேலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடிகளில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்களும் நடைபெற்றது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியதிலிருந்தே ஆஸ்திரேலியாவில் சீக்கியர்களுக்கும், மத்திய அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதை உறுதி செய்யும் விதமாக ஆஸ்திரேலியாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் காரில் சென்று கொண்டிருந்த சீக்கியர்களை தடுத்து நிறுத்திய மர்ம நபர்கள் சிலர் அவர்களை பேஸ்பால் கட்டையாலும், கத்தியாலும் அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் சீக்கியர்கள் சிறிய காயங்களுடன் அவர்களிடமிருந்து தப்பியுள்ளனர். ஆனால் கார் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இதனையடுத்து, "சிட்னியில் உள்ள சீக்கியர்களுக்கும், மத்திய அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே உணவகங்கள் மற்றும் கோயில்களில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருவதாக ஆஸ்திரேலியாவின் சட்ட ஒழுங்கு அமல்படுத்தும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், "ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருடன் சண்டையிடுவதுபோல் உள்ளது" என்று லிட்டில் இந்தியா பகுதியில் வசிக்கும் கமல் சிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சீக்கியர்கள் மீது பா.ஜ.க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.