தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஈழத்தமிழர் குறித்த தனது நாடகத்தை அரங்கேற்றிவிட்டுப் போயிருக்கிறார்!
"யாழ்ப்பாணம் சென்ற ஒரே பிரதமர் நான்தான். அங்குள்ள தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளைப் போன்று கடந்த காலங்களில் எந்த அரசும் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள கலாச்சார மையத்துக்கான கட்டுமானப் பணிகளை இந்தியா முன்னின்று செய்து கொடுத்தது. இலங்கைத் தமிழர்க்கு சம வாய்ப்புகள், சமநீதி, அமைதி, கண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது" என்று பேசி இருக்கிறார் பிரதமர் மோடி.
இதெல்லாம் ராஜபக்ஷேவுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை! இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ஷே சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குத்தான் அவர் வந்தார். "இலங்கையில் உள்ள தமிழர்க்கு சம உரிமை அளித்து அவர்கள் அமைதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்" என்று அப்போதும் அவரிடம் மோடி கேட்டுக் கொண்டதாகச் செய்திகள் வெளியானது. இரண்டு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது சொல்லப்படும் சம்பிரதாயக் கோரிக்கையாக மட்டுமே அது அமைந்திருந்ததே தவிர, உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட கோரிக்கையாக இல்லை. ஏனென்றால், அதனை வலியுறுத்தி எந்த அழுத்தங்களும் இந்தியா தரவில்லை.
இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழர்கள் உரிமை குறித்த கேள்விக்கு மழுப்பலான பதிலைத்தான் அப்போதே ராஜபக்சே கொடுத்தார். இப்படி பிரதமர் மோடி கோரிக்கை வைத்தது தொடர்பாக அப்போதே பி.பி.சி. செய்தி நிறுவனம், இலங்கையைச் சார்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்டது. அப்போது அவர்கள் சொன்னவை அனைத்தும் பிரதமர் நடத்தும் நாடகத்தை அம்பலப்படுத்தியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியில், "இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் ஈழத்தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்து வந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையே இலங்கை முழுமையாக மீறிவிட்டது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை மீறி, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் வேரூன்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை வழங்கியதே ராஜபக்ஷே அரசாங்கம்தான். இலங்கையை முற்று முழுதாக சீனாவிற்கு கடனாளி நாடாக மாற்றி அமைத்து இலங்கையில் இருக்கின்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துகளை சீனாவிற்கு விற்பனை செய்கின்ற நிலைமை காணப்படுகிறது. கோத்தபய ராஜபக்ஷே அண்மையில் இந்தியா வந்த போது, 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மாகாண சபைக்கு முழுமையான அதிகாரம் வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்திய போது அதை அவர் நிராகரித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷே கூட மிகத்தெளிவாக 13ஆம் திருத்தத்தை அமல்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து 13ஆம் திருத்தத்தை இந்தியா வலியுறுத்துவதில் பயன் இல்லை. ஏனெனில் தமிழ் மக்கள் கூட 13ஆம் திருத்தத்தை நிராகரித்துதான் வந்திருக்கின்றார்கள். தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக சமஷ்டி தீர்வு மட்டும் தான் தமிழ் தேசத்தை இலங்கை தீவில் காப்பாற்றும் என்று கருதி வந்திருக்கிறார்கள்" என்பதுதான் அவர் அளித்துள்ள முழுமையான விளக்கம்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசும் போது, "இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு ராஜபக்ஷே இந்து நாளிதழுக்கு தரும் பேட்டியில் வடக்கு மாகாணத்திற்கு ஒரு குழுவை அனுப்பி அதைப்பற்றி பேச இருப்பதாக பிரதமர் சொல்லியிருக்கிறார்.
தமிழ் மக்கள் மிக நீண்ட ஒரு போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். பல லட்சக்கணக்கான உயிர்களை அதற்கு விலையாக கொடுத்து இருக்கிறார்கள். குறைந்தபட்சம் இந்த மண்ணில் சிங்கள மக்களுக்கு சமத்துவமாக வாழவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இப்பொழுது இருக்கும் இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் தாங்கள் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒரு கருத்தையும் சிங்கள மக்கள் விரும்பாதவற்றை தாங்கள் கொடுக்க முடியாது என்று ஒரு கருத்தையும் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பிரச்சினையை பார்க்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், "இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதிகள், பிரதமர்கள் செல்வதும் இணக்கத்தை தெரிவிப்பதும் ஒரு சில மணி நேரங்களில் அதை வாசல் கதவுகளில் வைத்து மறுதலிப்பு செய்வதும், இலங்கை திரும்பியதும் ஏமாற்றுவதுமாக நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" என்று சொல்லி இருக்கிறார். ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் ஆனந்தி சசிதரன் பேசும் போது, "இறுதி யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் இனப் பிரச்சினைக்கான தீர்வாக ஒரு வரியைக் கூட எழுதாத இலங்கை அரசாங்கம் இனி எதனை பெற்றுத்தரப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. இன்று காலம் கடந்து இந்த நீதியைப் பெற்று விடுவோம் என்று பல உயிர்கள் மரணித்து விட்ட நிலையில் இந்திய பிரதமரின் இலங்கைக்கான அழுத்தம் எந்த அளவில் சாத்தியப்படும் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது.
தன்னுடைய பூகோள நலன் சார்ந்த விடயத்தை மட்டும் முன்னெடுக்காது இந்தியா ஈழத் தமிழர்களுடைய உண்மையான உரிமைகள் தொடர்பாக வெளிப்படையாக தமிழர் தரப்புடன் பேசவேண்டிய காலம் நெருங்கி இருக்கிறது"" என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது இவர்கள் ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்னவென்றால், மோடி சொல்வது எதுவும் இலங்கையில் நடக்கவில்லை, இலங்கை அரசாங்கம் மாறவில்லை என்பதைத்தான். ஆனால் இலங்கை அரசாங்கம், ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் தரத் தயாராகிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க மோடி நினைக்கிறார். இது ஈழத்தமிழ் பகுதியின் உண்மை நிலைமைக்கு முற்றிலும் மாறானது.