முரசொலி தலையங்கம்

“கச்சத்தீவு விவகாரமும் இந்திய-இலங்கை அரசுகளின் உடன்படிக்கையும்” - முரசொலி தலையங்கம்!

கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுக்கிற அதிகாரம் மாநில அரசுக்கு ஏது என கேள்வி எழுப்பி முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“கச்சத்தீவு விவகாரமும் இந்திய-இலங்கை அரசுகளின் உடன்படிக்கையும்” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அரசு, 1974-ஆம் ஆண்டு இருநாட்டுப் பிரதமர்களும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி இலங்கை அரசுக்குக் கச்சத்தீவைக் கொடுத்துவிட்டது. அப்படிக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளில் இந்திய அரசு முயன்று கொண்டிருப்பதாகவும், இது ஒரு நீண்டகாலமாகும் நிகழ்மை என்றும், மத்திய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைகளின் இணை அமைச்சர் வி.கே.சிங் தற்போது தெரிவித்திருக்கிறார். இது ஒரு நல்ல செய்திதான்!

ஆனால் கச்சத்தீவைத் திரும்பப் பெறுவது எப்போது நடக்கும்? கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கிற போது பிரதமர் மட்டுமே உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கிறார். இப்படிச்செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு எத்தகைய சட்டப்பூர்வமான மதிப்பும் கிடையாது என்றும், கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதில் அரசைமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாகத்தான் அது நடந்து இருக்க வேண்டும் என்றும் இரா.செழியன் குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் நாம் எடுத்துரைக்க விரும்புகின்றோம். இக்கருத்து சரியானதுதானா என்று, சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசால் கச்சத்தீவு கொடுக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை. மத்திய அரசு எந்தவிதத் தகவலையும் மாநில அரசுக்குத் தெரிவிக்கவில்லை. இப்போதுகூட சிலர் தி.மு.க. அரசு கலைஞர் அரசு கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது என்பதாகப் பேசி வருகிறார்கள். தாரை வார்த்துக் கொடுக்கிற அதிகாரம் மாநில அரசுக்கு ஏது? 1974 ஜூலையில் மத்திய அரசு கச்சத்தீவைக் கொடுத்த போது, கலைஞரின் அரசும் கழகமும் வாளாய் இருக்கவில்லை. கலைஞர் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அதனை எதிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கும் அப்போதைய பிரதமருக்கும் அனுப்பி வைத்தார். அதேபோல் கழகப் பொதுக்குழுவும் தீர்மானம் நிறைவேற்றியது. அதோடு கலைஞர் சட்டமன்றத்தில் 21.08.1974இல் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

“கச்சத்தீவு விவகாரமும் இந்திய-இலங்கை அரசுகளின் உடன்படிக்கையும்” - முரசொலி தலையங்கம்!

அந்தத் தீர்மான விவரமாவது: ‘இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது’. இப்படிச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, கலைஞர் நின்று விடவில்லை.

அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் முழுவதும் கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டனக் கூட்டங்களை நடத்தியது. கழகத்தின் நிலைப்பாடு என்பது, ‘கச்சத்தீவின் மீது இந்திய அரசுக்கு உரிமை இருக்க வேண்டும்’ என்பதுதான்! கச்சத்தீவு சின்னஞ்சிறியதாக இருந்தாலும் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தது. ஆனாலும், கச்சத்தீவு உடன்பாடு, அதன் விதியில் ஒரு சலுகையையும் வழங்கி இருந்தது. 8 விதிகளைக் கொண்ட அந்த உடன்பாடு அதன் 5வது விதியில், "கச்சத் தீவுக்கு வருபவர்கள் இதுநாள் வரை வந்து போனது போல வந்து போகவும், கச்சத்தீவை அனுபவிப்பதற்கும் முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை" என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த விதியை இலங்கை அரசு பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இதைப் பயன்படுத்தி அதன்படி உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்க மாட்டார்கள். கச்சத்தீவினை இலங்கைக்குக் கொடுத்த பிறகு தமிழ்நாட்டு மீனவர்களின் துயரம் அதிகமாயிற்று. 1983இல் ஈழப் பிரச்சினை எழுச்சியுற்ற போது, மேலும் மீனவர் பிரச்சினைகள் அதிகமாயிற்று. இதுவரை 10,000 முறை துப்பாக்கிச் சூடுகள் இலங்கைக் கடற்படையினரால் நிகழ்த்தப்பட்டு இருக்கும். சிறைபிடிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள் என்று மீனவர்கள் பெருந்துன்பம் அடைந்தார்கள். அண்மையில் கூட மெசியா (29), செந்தில் குமார் (32), நாகராசன் (52), சாம்சன் டார்வின் (21) ஆகிய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் மீன்பிடிப் படகை மோதி, அம்மீனவர்களை மூழ்கடித்துக் கொன்றனர். இச்செய்தியை அவர்களே, இலங்கை கமிஷனருக்கு கடலில் இந்தியக் குடிமகனின் பிணங்கள் உள்ளதாகப் புகார் தருகிறார்கள். ஒரு நாட்டின் கடற்படையோ, இராணுவமோ அண்டை நாட்டு மக்களைச் சுட்டுக் கொன்றால் நட்ட ஈடோ, மன்னிப்போ சம்பந்தப்பட்ட நாடு கோர வேண்டும். ஆனால், இந்திய அரசு ஒரு முறைகூட இதுகுறித்து இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்திருப்பதைப் போல, இந்திய அரசு கச்சத்தீவைப் பெறுவதில் முயற்சி எடுத்து வருமானால் அது வரவேற்கத்தக்க செய்தியே ஆகும்.

கச்சத்தீவு ஒப்பந்த நகலை நாடாளுமன்றத்தில் 23.07.1974 இல் அப்போதைய வெளி விவகாரத்துறை அமைச்சர் சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது அதன் மீது எதிர்க் கருத்துரைகள் வழங்கப்பட்டன. இப்போதும் அவை பதிவில் இருக்கின்றன. கச்சத்தீவு விவகாரத்தில் நாம் கழகத்தின் நிலைப்பாட்டை மேலே எடுத்துக்காட்டி இருக்கின்றோம். இன்றைய நிலையில் அமைச்சர் வி.கே.சிங்கின் கருத்துப்படி, கச்சத்தீவைத் திரும்பப் பெற முயல்கிற முயற்சி இன்னும் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கக்கூடாது. இப்போதே அந்த உடன்பாட்டிற்கு வயது 48 ஆகிவிட்டது. மத்திய அரசு கச்சத்தீவைத் திரும்பப் பெறும் விவகாரத்தை விரைந்து முடிக்குமானால், தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அது ஒரு அரணாக அமையும். கச்சத்தீவு உடன்படிக்கைக்குப் பிறகுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினை அதிகமாயிற்று. அந்தத் துயரத்தைத் போக்குவது மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது. செய்யுமா, மத்திய அரசு? காலம் தான் பதில் சொல்லும்.

banner

Related Stories

Related Stories