முரசொலி தலையங்கம்

“போலி முதல்வரின் போலி வேஷங்கள்” - முரசொலி தலையங்கம்!

தேர்தல் நேரத்தில் இப்படி ஓர் அறிவிப்பு வெளியாகும் என்பதை அறிந்து, ஆளும் கட்சியினரும் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்களும், முன்கூட்டியே திட்டமிட்டு நிறைய கடன் வாங்கியுள்ளார்கள்

“போலி முதல்வரின் போலி வேஷங்கள்” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை" என்று சொல்வதைப்போல ஊர் ஊராகப் போய் பொய் வேடம் போட்டு உளறிக் கொண்டு இருக்கிறார்பழனிசாமி! திருப்பத்தூரில் கூட்டம் வரவில்லை என்பதற்காக 100 ரூபாய் கொடுத்து ஆள்களை கூட்டி வந்த கூட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு பொய்யைச் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இது தொடர்பாக இணைய தளங்களில் ஆதாரத்துடன் வீடியோ காட்சிகளே வெளியானது. "தி.மு.க.வினருக்கும் சேர்த்துத்தான் பயிர்க்கடன் தள்ளுபடி" என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார் பழனிசாமி.

வாய்க்கு வந்ததை உளறுவது அவரது வழக்கம். "கடன் தள்ளுபடி நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் மீண்டும் விமர்சித்தால் தி.மு.க.வினரே அவருக்கு எதிராக கொடிபிடிப்பார்கள்" என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. விவசாயிகளின் கடனை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டேன் என்று பழனிசாமி சொன்னால் விவசாயிகளே அவருக்கு எதிராக கருப்புக் கொடி பிடிப்பார்கள். ஊருக்குள் வரவிடாமல் தடுப்பார்கள். ஒட்டுமொத்தக் கடன் தேவையில் 20 சதவிகிதத்தைத்தான் கூட்டுறவு வங்கிகள் பூர்த்தி செய்கிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள் தான் மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. கூட்டுறவு வங்கிக் கடன்கள் நீங்கலாக மற்ற கடன்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பழனிசாமி, ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் கவலையைத் தீர்த்துவிட்டதாகச் சொல்வதே மாபெரும் நாடகம்.

“போலி முதல்வரின் போலி வேஷங்கள்” - முரசொலி தலையங்கம்!

அதில் இன்னொரு நாடகம், தி.மு.க.வினருக்கும் சேர்த்துத்தான் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதாகும். முதலமைச்சரின் வாயில் இருந்து வந்தது முழுப்பொய் என்பதை ‘விகடன் இணையத்தளம்' அம்பலப்படுத்தி உள்ளது. விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வரும் தஞ்சை மாவட்ட பத்திரிக்கையாளர் கு.இராமகிருஷ்ணன், முதலமைச்சரின் போலி முகத்தை கிழித்துள்ளார். ஆளும் கட்சியினருக்கு மட்டுமே சமீபகாலமாக பயிர்க்கடன்கள் தரப்பட்டதாக எழுதி உள்ளார். "கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சட்டசபையில் அறிவித்தார். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகவும், மார்கழி மாதம் எதிர்பாராமல் பெய்த தொடர் கனமழையாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியிருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும் என ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், இந்த அறிவிப்பால் உண்மையான விவசாயிகளை விடவும் ஆளுங்கட்சியின் பின்புலம் உள்ளவர்கள் தாம் அதிகம் பயனடையப் போகிறார்கள் எனவும், தேர்தல் நேரத்தில் இப்படி ஓர் அறிவிப்பு வெளியாகும் என்பதை அறிந்து, ஆளும் கட்சியினரும் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்களும், முன்கூட்டியே திட்டமிட்டு நிறைய கடன் வாங்கியுள்ளார்கள் எனவும் அதிர்ச்சித் தகவலை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகிறார்கள் விவசாயிகள்" என்றும் எழுதி இருக்கிறார் பத்திரிக்கையாளர் கு.ராமகிருஷ்ணன். இது குறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் பேட்டியையும் அவர் வெளியிட்டுள்ளார். "கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைப்பதில்லை. இதனால் சுமார் 80 சதவிகித விவசாயிகள், சாகுபடி செலவுகளுக்கு தேசிய மற்றும் வணிக வங்கிகளில்தான் கடன் வாங்கியுள்ளார்கள். 20 சதவிகிதம் விவசாயிகள் தாம் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்கள். அவர்களில் 80 சதவிகிதம் பேர் ஆளும் கட்சியின் பின்புலம் உள்ளவர்கள்.

இதில் என்ன வேதனை என்றால், விவசாயத்தை மட்டுமே முழுமையான, முழுநேர வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளில் பெரும்பாலானோருக்கு, இதனால் பலன் இல்லை. தேசிய மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்’’என்றார். "சாகுபடி செலவுகளுக்காகத்தான் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், அதிர்ச்சிகரமான வேடிக்கை என்னவென்றால், சாகுபடியே செய்யாமல் சும்மா கிடக்கும் நிலங்களுக்கும் குறுக்கு வழிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுவிடுகிறார்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளூர் அரசியல்வாதிகள்" என்றும் அவர் எழுதி இருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன் இறங்கி இருப்பதாகவும் அந்தக் கட்டுரை சொல்கிறது. இவர் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களின் பின்புலம் உள்ளவர்கள் எப்படியெல்லாம் குறுக்கு வழிகளில் பயிர்க்கடன் வாங்குகிறார்கள் என்பதையும் பேட்டியாக கொடுத்துள்ளார்.

``தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளோட நிர்வாகக் குழுவுல கடந்த ஆறு ஆண்டுகளாக ஆளுங்கட்சியினர்தான் பதவி வகிக்கிறாங்க. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, சொசைட்டி தலைவர், துணைத் தலைவர், இயக்குநர் உள்ளிட்ட எல்லா பதவிகள்லயுமே அ.தி.மு.க.-வினர் மட்டும்தான் இருக்காங்க. இதனால் எந்த முறைகேடுகள் நடந்தாலும் கேள்வி கேட்க ஆள் கிடையாது. ஒரு விவசாயியின் குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்தான் பயிர்க்கடன் கொடுக்கணுங்கிறது விதிமுறை. ஆனால், நிர்வாகக் குழுவுல பதவி வகிக்கக்கூடியவங்க, தங்களோட பேர்லயும் தங்களோட குடும்பத்துல உள்ள மற்ற உறுப்பினர்கள் பேர்லயும் பல லட்சம் ரூபாய் கடன் வாங்குறாங்க. பயிர்க் கடன் வாங்க, கிராம நிர்வாக அலுவலர்கிட்ட சிட்டா அடங்கல் வாங்கியாகணும். வி.ஏ.ஒ-வுக்கு நூறு, இருநூறு லஞ்சம் கொடுத்தால் எப்படி வேணும்னாலும் சிட்டா அடங்கல் கொடுத்துடுவாங்க.

ஒரே நிலத்துக்குரிய சர்வே நம்பரைப் பயன்படுத்தி, சுற்று வட்டாரப் பகுதிகள்ல உள்ள பல தொடக்க வேளாண் கூட்டுறவுவங்கிகள்ல கடன வாங்கிடுறாங்க. இதுல பெரும்பாலானது சாகுபடி செய்யாமல் சும்மா கிடக்குற நிலம். சில நிலங்களோட உரிமையாளர்கள் வெளியூர்கள்ல இருப்பாங்க. அந்த மாதிரியான நிலங்களோட சர்வே நம்பரைப் பயன்படுத்தி, அதுல குத்தகைக்கு சாகுபடி செய்றோம்னு சிட்டா அடங்கல் தயார் செஞ்சும் பயிர் கடன்வாங்குறாங்க. இதுமாதிரி இன்னும் பல வழிகள்ல மோசடிகள் நடக்குது. இதனால் உண்மையான விவசாயிகளுக்கு, சாகுபடி செலவுக்கு சொசைட்டி பேங்க்ல பயிர்க்கடன் கிடைக்காமல் போகுறதோட மட்டுமல்லாமல், கடன் தள்ளுபடி பலன்களும் கிடைக்காமல் போயிடுது. கடன் தள்ளுபடி அறிவிக்கக்கூடிய தமிழக அரசு, கடந்த காலங்கள்ல அதுக்குரிய தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக கொடுத்ததில்லை. இதனால்தான் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் நலிவடைஞ்சு கிடக்கு, உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கிடைக்காமலும் போயிடுது" என்று சுகுமாறன் சொல்லி இருக்கிறார். பழனிசாமியின் பகல் வேஷங்களில் இதுவும் ஒன்று என்பதை விவசாயிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

banner

Related Stories

Related Stories