தமிழ்நாடு

“அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம் - போலி விளம்பரங்களில் குறியாக இருக்கும் போலி விவசாயி”: உதயநிதி ஸ்டாலின்

போலி விவசாயியோ போலி விளம்பரங்கள் கொடுப்பதிலேயே குறியாகவுள்ளார் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

“அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம் - போலி விளம்பரங்களில் குறியாக இருக்கும் போலி விவசாயி”: உதயநிதி ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால், அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி மிகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த மாதம் புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சம்பா பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்தன. மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்களுக்கு விவசாயிகள் மீண்டும் உரம், பூச்சி மருந்து தெளித்து குறைவான மகசூலையாவது பெற்றிட முயன்றனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மீண்டும் பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. மேலும், வயல்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்டதற்கான நிவாரணத்தையே இன்னும் மத்திய மாநில அரசுகள் வழங்காத நிலையில், இந்த ஆண்டின் மொத்த அறுவடையும் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள்.

‘தானும் ஒரு விவசாயி’ எனச் சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், விவசாயிகள் ஏற்றம் பெற உழைத்ததாக வெற்று விளம்பரம் மட்டும் செய்துகொள்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கனமழையால் டெல்டாவில் அறுவடை நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. போலி விவசாயியோ போலி விளம்பரங்கள் கொடுப்பதிலேயே குறியாகவுள்ளார். பயிர் சேதத்தை ஆய்ந்து பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் உழவர் திருநாள் உற்சாக திருநாளாக அமையும். இதை அடிமைகள் உணர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories