எழுவர் விடுதலை விவகாரத்தில் மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுவிட்டார். அவரை நம் கேள்வி கேட்க முடியாது. அவர் சட்டமன்றத்திலும் உண்டு இல்லை என பதில் சொல்லமாட்டார்.
இந்தச் சூழலில் எழுவரில் ஒருவரான நளினி, தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி நளினியை விடுவிக்கக் கோரிய மனுவை 2018 ஆண்டு ஏப்ரல் மாதமே மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு இப்படித் தலையிடுவது சரியா? மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அரசியல் இறைமையை மறுக்கிறது; சட்ட இறைமையை மறுக்கிறது. இதையெல்லாம் ஆழ்ந்து பார்க்கும்போது மத்திய அரசு ஒரு ஏகாதிபத்திய அரசாகவே செயல்படுவது தெளிவாகிறது என முரசொலி நாளேடு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.