கடந்த ஜனவரி 5ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் புகுந்து மாணவர்களைத் தாக்கியது மர்ம கும்பல். பல மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில் மாணவர்களும், பேராசிரியர்களும், பல்கலை. ஊழியர்களும் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பினர் என்பது அம்பலமானது. ஆனால், அவர்களில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மாறாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது வழக்குகள் புனையப்பட்டுள்ளன. இதுபோன்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களும், வழக்குப் பதிவுகளும் 2014ம் ஆண்டுக்குப் பின்னர் அதிகமாகியிருக்கின்றன.
சாதாரண குடும்பத்து மாணவர்களைக் கல்வியைக் கற்கவிடாமல் தடையை ஏற்படுத்துகின்ற போக்கு எங்கிருந்து கிளம்புகிறது என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமையிலிருந்தே கிளம்புகிறது. அவர்களில் பெரும்பாலும் சங்பரிவார்களின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இவர்களிலிருந்துதான் முகமூடி நபர்களும் உருவாகிறார்கள்.
இப்படியான வன்முறைகளின் பின்னே ஒளிந்திருக்கிற ஆதிக்க சாதியினரின் மனோபாவம் துடைத்தெறியப்பட வேண்டுமானால் பா.ஜ.க ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.