ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தகுதி பறிப்பு, மக்களாட்சி உரிமை பறிப்பு உள்ளிட்ட உரிமை மீறல்களை அடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது.
ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களையும் கைப்பற்றி, பா.ஜ.க.வின் அடக்குமுறைக்கு முட்டுக்கட்டைப் போட்டது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 16) ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா அவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி அவர்களை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
இந்தியத் துணைக் கண்டத்தின் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!” என வாழ்த்து தெரிவித்து, தனது X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.