மு.க.ஸ்டாலின்

”நேற்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை” : நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

”நேற்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை” : நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.8.2024) சென்னையில், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும், கழக மாநில மீனவர் அணி துணைத் தலைவருமான கே.பி.சங்கர் அவர்களின் மகன் திலீபன் – விஷாலி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து விழாவில் ஆற்றிய உரை:-

நம்முடைய சங்கர் அவர்கள் நன்றியுரை ஆற்றியபோது 30 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய திருமணத்திற்கு அழைத்த நேரத்தில் நான் வராமல் போனதை கொஞ்சம் வருத்தத்தோடு எடுத்துச் சொன்னார். இந்த மணவிழா நிகழ்ச்சி என்பது நம்முடைய குடும்ப நிகழ்ச்சி. நாம் எல்லாம் நம்முடைய குடும்பத்தில் ஒரு திருமணம் நடக்கிறது என்று சொன்னால், அதில் எந்த உணர்வோடு கலந்து கொள்கிறோமோ, எந்த உணர்வோடு கலந்து கொண்டு வாழ்த்துகிறோமோ, அதே உணர்வோடுதான் இந்த விழாவில் நான் மட்டுமல்ல, மேடையில் இருக்கிறவர்கள் மட்டுமல்ல, நீங்களும் இங்கே வருகை தந்து மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

இதை கே.பி.சங்கர் இல்லத் திருமண விழா என்று சொல்வதைவிட, மறைந்த கழகச் செயல்வீரர் கே.பி.பி.சாமி இல்லத் திருமண விழா என்று சொல்லலாம். ஏன், எமெர்ஜென்சியை எதிர்கொண்ட மீசை பரசுராமன் அவர்கள் இல்லத் திருமண விழா என்றும் சொல்லலாம். இன்றைக்கும் அவருடைய முகம் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. அப்படி கம்பீரமாக, இந்த திருவொற்றியூர் பகுதியில், மீனவ சமுதாயத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்த திருவொற்றியூரில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஒரு பாதுகாவல் அரணாக இருந்தவர் நம்முடைய பரசுராமன் அவர்கள். எனவே, அவருடைய குடும்பத்தில் நடைபெறக்கூடிய இந்தத் திருமணம்.

இவ்வாறு, வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக, எத்தனை சோதனை வந்தாலும், எத்தனை கொடுமைகள் வந்தாலும், எவ்வளவு அநியாயங்கள், அட்டூழியங்கள் வந்தாலும், அதையெல்லாம் எதிர்த்துப் போராடி, இந்த திருவொற்றியூர் பகுதியில் கழகம் வளர்வதற்கு பாடுபட்ட உன்னதமான ஒரு தியாகியாக வலம் வந்தவர்தான் நம்முடைய பரசுராமன் அவர்கள். அந்தக் குடும்பத்தில் நடைபெறக்கூடிய விழா இது. கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக பரசுராமன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளாக மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

கழகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து கழகத் தொண்டராக இருந்தவர்தான், தலைவர் கலைஞரால்தான் மீசை பரசுராமன் என்று அழைக்கப்பட்டார். முன்னாள் நகரக் கழக அவைத் தலைவராக பரசுராமன் அவர்கள் மிசாவில் கைதாகி பல அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஆளாக இருக்கக்கூடியவர். கழகத் துண்டை தோளில் இருந்து எந்த நிமிடத்தில் அவர் எடுத்ததில்லை. எந்த நிலையிலும், யார் அழைத்தும் எந்தப் பக்கமும் சென்றதில்லை. கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் என்ற உணர்வோடு வாழ்ந்துகாட்டியவர்.

அப்படிப்பட்ட அப்பாவிற்குத் தப்பாமல் பிறந்த பிள்ளைகள்தான் கே.பி.பி.சாமி அவர்களும், கே.பி.சங்கர் அவர்களும்! கே.வி.கே. குப்பம் பகுதி மீனவ மக்களுக்காக கே.பி.பி.சாமி அவர்கள் செய்த உதவிகளை பார்த்து, 2006 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அவருக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக, வேட்பாளாராக நிற்பதற்கு வாய்ப்பை தந்தார்கள்.

2006-ல் இருந்து 2011 வரை கழக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, மீன்வளத் துறை அமைச்சராகவும் இருந்து பொறுப்பேற்றுப் பணியாற்றியிருக்கிறார்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம், சுனாமியில் வீட்டை இழந்தவர்களுக்கு தொகுப்பு வீடுகள், சுனாமியில் பாதிப்படைந்த விசைப்படகுகளுக்கு வழங்கிய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களை மீனவர் நலனுக்காக செய்து சாதனை படைத்தவர்.

சட்டமன்றத்திலும் மிகச் சிறப்பாக, அவர் எழுந்து நின்றாலே, எதிரே இருக்கக்கூடிய அதிமுக-வினர் உட்கார்ந்து விடுவார்கள். ஏனென்றால், மனதில் பட்டதை அப்படியே பட்டென்று சொல்லக்கூடியவர். எதைப்பற்றியும் சொல்ல தயங்கமாட்டார். பக்கத்தில் இருக்கக்கூடிய நாங்கள் தான் கொஞ்சம் பொறுமையாக பேசுங்கள், பொறுமையாக பேசுங்கள் என்று சொல்வோம். அந்த அளவிற்கு எல்லோருடைய கவனத்தை ஈர்த்தவர் நம்முடைய மறைந்த சாமி அவர்கள். மீனவ சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல், தன்னைத் தேர்ந்தெடுத்த திருவொற்றியூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் பல நலத்திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தவர்.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத்திலும் கொண்டு வருவதற்கு துணை நின்றவர். 2011-ல் ஆட்சி மாற்றம் நடந்து அன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் பல இன்னல்களுக்கு எல்லாம் ஆளாகி, பல பொய்வழக்குகளை எல்லாம் சந்தித்து, சிறையில் பல கொடுமைகளை எல்லாம் அனுபவித்தவர் நம்முடைய சாமி அவர்கள். அவர் மட்டுமல்லாமல், அவர் குடும்பத்தில் இருந்த பிறரும் இந்த அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். மனைவி, மகனை இழந்து உடல்நிலையும் இதனால் அவருக்கு பாதிக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்ட நேரத்தில்கூட இந்தப் பகுதிக்கு உற்ற துணையாக இருந்து கழகப் பணியாற்றியவர்தான் நம்முடைய கேபி.சாமி அவர்கள்.

”நேற்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை” : நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

இன்றைக்கு அவர் விற்றுச் சென்றிருக்கக்கூடிய இந்தப் பணிகளை எல்லாம் அவரோடு இருந்து அவருடைய அனுபவங்களை எல்லாம் பெற்று இன்றைக்கு உற்ற துணையாக இருந்து கழக பணிகள் ஆற்றிக் கொண்டிருக்கக்கூடியவர்தான் நம்முடைய கே.பி.பி.சங்கர் அவர்கள்.

2011 மாநகராட்சி மன்றத் தேர்தலில் சிறையில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தந்தை, அண்ணன் வழியில் இவரும் பணியாற்ற வேண்டும் என்று சொல்லி 2021 தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அதன்படி, மக்கள் எப்போதும் அணுகும் பிரதிநிதியாக இருந்து சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய சங்கர் அவர்கள்.

கடந்த ஓராண்டு காலமாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டு வருகிறோம். இந்தியாவில் இப்படிப்பட்ட விழா எந்தத் தலைவருக்கும் நடந்தது கிடையாது. இவ்வளவு சிறப்பான விழாக்கள் நடத்தியிருக்கின்றோம் என்று சொல்லும் அளவிற்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அது மட்டுமல்ல, தலைவர் கலைஞர் பெயரால்; கிண்டியில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் பிரம்மாண்டமான நூலகம், கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து முனையம் போன்ற எத்தனையோ பயனுள்ள அமைப்புகளை தலைவர் கலைஞர் பெயரால் ஏற்படுத்தியிருக்கிறோம்.

தம்பி, உதயநிதி சொன்னதுபோல, 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அதுவும் கலைஞர் பெயரில் தான் அமைந்திருக்கிறது.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல், நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி, நாணயம் வெளியீடு விழா. நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். 100 ரூபாய் நாணயம் தான் ஆனால் அதன் மதிப்பு 10,000 ரூபாய். மதிப்பே கிடையாது. யார் வேண்டுமென்றாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஏனென்றால், காந்தி அவர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நான் 1 இலட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவர் 1 இலட்சம் என்ன, 10 இலட்சம் கூட கொடுத்து வாங்கிக் கொள்வார். நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சியை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நேற்றைக்கு வருகை தந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தை போய் பார்க்கவேண்டும் என்று நாங்கள் கூட கேட்கவில்லை, பார்த்தே தீரவேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அத்தனையும் பார்த்துவிட்டு இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அதற்கு பிறகு நிகழ்ச்சிக்கு வந்தார். வந்தவுடனே ஒரு பெரிய அதிர்ச்சியை எங்களுக்கெல்லாம் கொடுத்தார். இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று சொன்ன அந்த காட்சியை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை. நேற்று இரவு முழுவதும், மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடைய நேற்றைய உரை உள்ளபடியே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசினால் எப்படி பேசுவார்களோ அதைவிட அதிகமாக, திமுக-வினர் பேசுவதைவிட அதிகமாக, சிறப்பாக தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்கத்தக்க உரையாக அந்த உரை அமைந்தது. கலைஞரை இந்தளவிற்கு புகழ வேண்டும், பாராட்டிப் பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அவருக்கு தேவையும் இல்லை. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்.

இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருத்தர் இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று பேட்டி கொடுக்கிறார். என்னவென்றால், நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது. தமிழில் இல்லை. தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார். முதலில் அரசியல் தெரிந்திருக்கவேண்டும். இல்லை நாட்டின் நடப்பு புரிந்திருக்கவேண்டும். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால், ஒன்றிய அரசு அனுமதி கொடுத்து ஒன்றிய அரசின் மூலமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. ஏற்கனவே, பலபேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதைபோல பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது ஒன்றிய அரசு இந்தியில் தான் எழுதி, அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுத்துக்கள் அமைந்திருக்கும்.

”நேற்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை” : நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

ஆனால் அண்ணா அவர்களுக்கு நாணயத்தை வெளியிடுகிறபோது தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்தார் என்றால், யாரும் செய்யாத ஒரு அதிசயத்தை செய்தார். அண்ணா அவர்களின் தமிழ் கையெழுத்து அதில் இடம் பெறச் செய்யவேண்டும் என்று சொல்லி, அண்ணா அவர்களின் தமிழ் கையெழுத்து நாணயத்தில் பொறிக்கப்பட்டு அதற்கு பிறகுதான் அது வெளியிடப்பட்டது. அதுபோலதான், தலைவர் கலைஞர் அவர்களுடைய நாணயத்தை வெளியிடுகின்றபோது கலைஞருக்கு மிகவும் பிடித்த எழுத்து தமிழ் வெல்லும். பெரும்பாலும் அவர் தமிழில் கையெழுத்து இடுகிறபோது பெரும்பாலும், தமிழ் வெல்லும், தமிழ் வெல்லும் என்று சொல்லித்தான் கையெழுத்திடுவார்.

இல்லையென்றால், அண்ணா வாழ்க, அண்ணா புகழ் ஓங்குக, பெரியார் வாழ்க என்று சொல்லிதான் கையெழுத்திடுவார். ஆகவே, தமிழ் வெல்லும் என்பது தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதைக்கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல், இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. கேட்கிறார்? ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை? அய்யா எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, இந்த நிகழ்ச்சி திமுக நடத்தவில்லை. நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி. அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில்தான் நிகழ்ச்சி நடந்தது.

இந்த சராசரி அறிவு கூட இல்லாமல், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது. கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இதில் பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியே வெளியிட்டார். ஏனென்றால், ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. ஏன் மனிதனாகவே நினைக்கவில்லை. வர மறுத்துவிட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை. இன்றைக்கு நாம் அழைத்த அடுத்த விநாடி ஒரு சொல்கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம், 30 நிமிடத்திற்கு நடத்திவிட்டு போகவேண்டும் என்று சொன்னதற்கு, 15 நிமிடம் என்ன? எவ்வளவு நேரம் இருந்தாலும் காத்திருந்து அந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டு வந்தார். அதுதான் திமுக-விற்கு இருக்கக்கூடிய பெருமை; கலைஞருக்கு இருக்கக்கூடிய சிறப்பு.

இன்னும் ஒன்றை சொல்லவேண்டுமென்றால், அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களே அதிமுக-வினர், பாக்கெட்டில் படத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே, அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடங்கள் ஆகிறது? நான் கேட்கிறேன், இதுவரைக்கும் அந்த அம்மையார் அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா? ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்துவதற்கு கூட யோக்கியதை அற்றவர்கள், கலைஞர் அவர்களுடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.

ராஜ்நாத் சிங் அவர்களை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.க.வோடு நாம் உறவு வைத்துக் கொண்டிருக்கிறோம், உறவு வைக்கப்போகிறோம் என்று ஒரு செய்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது ஊடகத்திற்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும், ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் திமுக-வைதான், வாழ்த்தினாலும் திமுக-வைதான். நாங்கள் எல்லாம் ரகசிய உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவசியமே இல்லை.

அம்மையார் இந்திராகாந்தி அவர்களே சொன்னார்கள், கலைஞரை பொறுத்தவரைக்கும், திமுக-வை பொறுத்தவரைக்கும் எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கு அது ஒன்றே போதும். அந்த அளவிற்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம். முதலில் பழனிசாமி அவர்கள் அதைப் படிக்க வேண்டும். பழனிசாமி மாதிரி ஊர்ந்து சென்று, பதுங்கி சென்று பழி வாங்குகின்ற புத்தி திமுக-வுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம். அதற்காக நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன் அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கக்கூடிய உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு அமைத்துத் தந்திருக்கக்கூடிய பாதை.

அப்படிப்பட்ட இயக்கத்தை சார்ந்திருக்கக்கூடிய குடும்பத்தில் தான் இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே கூட தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசுகின்றபோது, சங்கருக்கு கோபம் வந்துவிடும் என்கின்ற பயத்தில் வந்தேன் என்று சொன்னார். நானும் அப்படிதான். ஆனால், ஒன்றை மறந்துவிடக்கூடாது, கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கிறது. சங்கரை நான் கேட்டுக் கொள்கிறேன், இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று நீங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ளவேண்டாம்.

கட்சிக்கென்று ஒரு பிரச்சனை வருகின்றபோது பெரிய கோபம் வந்தே தீரவேண்டும். அப்படிப்பட்ட ஆற்றலுக்குரியவராக நம்முடைய சங்கர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த சங்கர் இல்லத்தில் நடக்கின்ற இந்த திருமணம், அந்தத் திருமணத்தில் நானும் உங்களோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். ஏனென்றால், தமிழுக்குச் செம்மொழி என்று பெருமையை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆகவே, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய, வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக மணமக்கள் சிறப்பாக வாழவேண்டும், வாழவேண்டும் என்று மணமக்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

banner

Related Stories

Related Stories