தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர், தான் சந்தித்த தேர்தல்களில் தோல்வியுறாத தகைசால் தலைவர், மாநிலக்கட்சியை அரை நூற்றாண்டுக்கும் மேலாக கட்டிக்காத்த அரசியல் எழுச்சியாளர் என பல பெருமைகளைக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டுகால நினைவை போற்றும் வகையில், நேற்றைய நாள் (18.8.24) “தமிழ் வெல்லும்” என்ற கூற்றோடு, கலைஞர் முகம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டது.
நாணயத்தை, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையேற்று வெளியிட்டார். விழா மேடையில் பேசிய ராஜ்நாத் சிங், இந்திய அரசியலில் கலைஞரின் இன்றியமையாத இடத்தையும் விரிவுபடுத்தினார்.
இந்நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிறைவுற்றதையடுத்து, தனது X தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தனது ‘நா’நயத்தால் நம் உள்ளங்களில் எழுச்சியூட்டி, மக்கள் தொண்டில் கடைப்பிடித்த நாணயத்தால் தமிழினத் தலைவராக உயர்ந்த தலைவர் கலைஞர் அவர்களது வரலாற்றில் மீண்டும் ஒரு பொன் நாள்.
தமிழின உயர்வுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட நம் தலைவர் கலைஞரின் மகத்தான வாழ்வைப் போற்றும் வகையில் இந்திய அரசு, அவரது திருவுருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டது, அவரது உயிரினும் மேலான நமக்கான பெருமையும் கூட!” என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழில் 'நா' நயமும் – பொதுவாழ்வில் நாணயமும் மிகுந்த நம் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றி, கலைஞரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.
இந்திய அரசியலின் திசைகாட்டி - நவீன தமிழ்நாட்டின் தந்தை நம் கலைஞர் அவர்களின் திருவுருவம் பொறித்த இந்த 100 ரூபாய் நாணயத்தில், கலைஞரின் கையெழுத்தில் “தமிழ் வெல்லும்” என்ற லட்சிய முழக்கமும் இடம்பெற்றுள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெருமை கொள்கின்ற உணர்ச்சித் திருவிழா இது. நன்றிப் பெருக்கால் நிரம்பி இருந்தது கலைவாணர் அரங்கம்!
வாழ்க கலைஞர்! வெல்க தமிழ்!” என தெரிவித்துள்ளார்.