மு.க.ஸ்டாலின்

” 'நாவரசர்' திண்டுக்கல் ஐ. லியோனி".. நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாவரசர் என்று சொல்லும் அளவுக்கு பேச்சுத்திறன் படைத்தவர் திண்டுக்கல் ஐ.லியோனி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகாழரம் சூட்டியுள்ளார்.

” 'நாவரசர்' திண்டுக்கல் ஐ. லியோனி".. நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.3.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் . திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் எழுதிய “வளர்ந்த கதை சொல்லவா” நூலினை வெளியிட்டு ஆற்றிய உரை:-

நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறபோது, திண்டுக்கல் லியோனி அவர்களை அண்ணன் என்று விளித்தார்கள். நான் உடனே லியோனி அவர்களிடத்தில் உங்கள் வயது என்ன என்று கேட்டேன், 65, வருகிற 27 ஆம் தேதி 66 ஆக பிறக்கப் போகிறது என்று சொன்னார். 66 வயதை 27 ஆம் தேதி காண இருக்கக்கூடிய அவருக்கு முன்கூட்டியே நான் உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதே நேரத்தில் அவரே அதற்கு விளக்கம் சொல்லிவிட்டார், என்னை அவர் அண்ணன் என்று அழைத்து அவரை நான் தம்பி என்று அழைக்கலாமா என்றுகூட ஒரு வினாவை எழுப்பியிருக்கிறார். எனக்கே திண்டுக்கல் லியோனி அவர்கள் தம்பி தான், வயதைப் பொறுத்தவரைக்கும். எனக்கு 70, பாலுவுக்கு 80-ஐ தாண்டியிருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட இந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டு லியோனி அவர்கள் எழுதியிருக்கக்கூடிய அந்தப் புத்தகத்தை வெளியிட்டு அவரை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அவருக்கு மட்டுமல்ல, அவருடைய துணைவியாருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்க விரும்புகிறேன்.

” 'நாவரசர்' திண்டுக்கல் ஐ. லியோனி".. நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதுவரைக்கும், தான் வளர்ந்த கதையைத்தான் பேச்சு வழியாக நம்முடைய லியோனி அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் முதன்முதலாக தான் வாழ்ந்த கதையை, வளர்ந்த கதையை எழுத்தாகவும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

பாலு அவர்கள் “பாதை மாறா பயணம்” என்ற அந்தப் புத்தகத்தை நான் வெளியிட்ட நேரத்தில் நான் எடுத்துவைத்த அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றியிருக்கிறேன் என்று அவரே இங்கு எடுத்துச் சொன்னார். ஆகவே, அதற்காக நான் மீண்டும் அவருக்கு என்னுடைய நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருடைய பேச்சு மாதிரியே எழுத்தும் அவருக்கு கை வந்திருக்கிறது. எல்லோருக்கும் இப்படி பேச்சும் – எழுத்தும் ஒன்றாக கை வராது. அவருடைய எழுத்தும் சுவையாகத்தான் இருக்கிறது.

பட்டிமன்ற மேடைகளில் லியோனியுடைய அடைமொழியே ‘நகைச்சுவைத் தென்றல்’தான். தென்றல் எப்படி மிருதுவாக வருடி, ஒரு இதமான உணர்வை கொடுக்குமோ, அதே மாதிரி அவருடைய ‘டைமிங் ஜோக்ஸ்’ இருக்கின்றதே அதே மாதிரிதான் இருக்கும். அது பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, பாட்டுமன்றமாக இருந்தாலும் சரி, கருத்தரங்கமாக இருந்தாலும் சரி, விவாத மேடைகளாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சியினுடைய விவாதங்கள், எதுவாக இருந்தாலும், தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால், அந்த மேடையில் இருக்க்கூடிய பார்வையாளர்களை மட்டுமல்ல, வந்திருக்கக்கூடிய உங்களையும் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் அவருக்கு இருக்கிற காரணத்தால்தான் அவரை ‘நாவரசர்’என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு ஆற்றலைப் பெற்றிருக்கக்கூடியவர் நம்முடைய லியோனி அவர்கள்.

” 'நாவரசர்' திண்டுக்கல் ஐ. லியோனி".. நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆரம்பக் காலங்களில் தமிழ்நாடே அவருடைய உரைகளை நேரடியாவும், கேசட்டுகள் வாயிலாவும் கேட்டு, மெய் மறந்து இருந்தது. தமிழ்நாடே மயங்கியபோது நான் மட்டும் விதிவிலக்கா என்ன? காரில் போகும்போதெல்லாம் அவருடைய கேசட்டுகளை நான் கேட்பதுண்டு. அவருடைய பட்டிமன்ற கேசட்டுகளை தொடர்ந்து நான் இளைஞர் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் காரில்தான் செல்வேன். என்னோடு இளைஞர் அணியில் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த திருச்சி சிவா அவர்கள், நம்முடைய சகோதர் பரணி குமார் அவர்கள், என்னுடைய உயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் சேர்ந்து காரில் ஒன்றாக கிளம்புவோம். பெரும்பாலும் பரணிகுமார் தான் பகலில் கார் ஓட்டுவார். டிரைவர் இருப்பார், ஆனால் டிரைவர் கார் ஓட்டமாட்டார், பின்னால் காரில் வருவார்.

அவருடைய வேலை என்ன என்றால், நாங்கள் எங்கேயாவது காரை விட்டால், திருப்பி நிறுத்தி வைப்பவது, எடுத்து விடுவது, அதுதான் அவருடைய வேலை. பகலில் அவர் ஓட்டுவார், இரவு முழுவதும் நான் ஓட்டுவேன். ஏனென்றால், இரவில் நான் எப்போதும் தூங்கமாட்டேன். இப்போது எப்படி தூங்காமல் இருக்கிறேனோ அப்போதும் அப்படித்தான். ஏன் தூங்காமல் இப்படி கண் விழிக்கிறீர்கள் என்று இப்போதும் பலர் கேட்கிறார்கள். இது புதியதல்ல, பழையது, எனக்கு பழகிப் போய்விட்டது. இரவெல்லாம் கார் ஓட்டிக்கொண்டு போவோம். ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைக்கு இரவே இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவிடுவோம். அப்படி காரில் போகின்றபோது தொடர்ந்து நம்முடைய லியோனி அவர்களுடைய கேசட்டுக்ளைத்தான் நான் கேட்டுக் கொண்டு வருவேன். அதைக் கேட்டுக்கொண்டு போனால் நேரம் போவதே தெரியாது.

” 'நாவரசர்' திண்டுக்கல் ஐ. லியோனி".. நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அவ்வளவு சுவாரஸ்யமாக பேசுவார். நகைச்சுவையோடு இருக்கும், சிரித்துக்கொண்டே, நாங்கள் பேசிக்கொண்டு கேட்டுக்கொண்டு செல்வோம். அப்படி கேட்டுகேட்டு, அவருடைய ஃபேனாகவே நான் மாறிவிட்டேன். இந்த நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார், பேசும்போது கூட சொன்னார்.

நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, வேளச்சேரி பகுதியில்தான் குடியிருந்தேன். அப்படி

குடியிருந்தபோது, வேளச்சேரியில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தோம். அந்தப் பகுதிக்கு சீதாபதி நகர் என்று பெயர். சீதாபதி நகர் அசோசியேஷன் என்று ஒரு பெயர் வைத்து ஒரு அமைப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அந்த அமைப்பின் சார்பில் நம்முடைய திண்டுக்கல் லியோனி அவர்கள் பட்டிமன்றத்தை பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்த வேண்டும் என்று முடிவு செய்து நடத்தினோம். அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்குப் பிறகு அவர் அதில் என்ன பாட்டு பாடினார், என்ன பாட்டு பாடி முடித்தார் என்பதை அவரே பாடிக் காண்பித்தார். அது என் நினைவில் பசுமையாக ஆழமாக பதிந்திருக்கிறது. அதை முடித்ததற்குப் பிறகு நான் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு விருந்து வைத்தேன். அவருக்கு மட்டுமல்ல, அவருடைய குழு அத்தனை பேரும் இருந்து சாப்பிட்டுவிட்டுதான் சென்றார்கள். அன்றிலிருந்து அவரோடு என்னோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

முதன்முதலாக 1996-ஆம் ஆண்டு கழக மேடைக்கு நான்தான் முதன்முதலில் அவரை அழைத்துக் கொண்டு சென்றேன். இளைஞரணி சார்பில் தலைவர் கலைஞருடைய பவள விழா சிறப்பு பட்டிமன்றத்தில் அவரை பங்கேற்க வைத்தேன்.

அப்போதெல்லாம் அவர் திமுக-வின் மெம்பர் கிடையாது. 2006 ஆம் ஆண்டுதான் அவர் மெம்பர் ஆகிறார். அப்போதெல்லாம் பேண்ட் தான் போட்டுக் கொண்டிருப்பார். 2006 ஆம் ஆண்டு முதல்முதலில் வேட்டி கட்ட வைத்தது நான்தான். நான்தான் முதல்முதலில் தலைவரிடம் கொடுத்து அவரிடத்தில் வேட்டி கொடுத்து இருவண்ண கருப்பு சிவப்பு வண்ணம் போட்ட அந்த வேட்டியை அவரைக் கட்டவைத்தேன். அடுத்த 15 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டையே வலம் வந்தார். வலம் வந்தார் என்றால், அவருடைய பட்டிமன்றங்கள் மூலமாக மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டார்; பகுத்தறிவு கருத்துகளை பரப்பினார்; நாமெல்லாம் பெரிதும் மதிக்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் மாதிரியே பாட்டெல்லாம் பாடி பட்டிமன்றத்தை அவர் நடத்துவார். இது எல்லாவற்றையும் ஜனரஞ்சகமாக பேசுவார். அதுதான் அவருடைய சிறப்பே!

” 'நாவரசர்' திண்டுக்கல் ஐ. லியோனி".. நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அந்த பட்டிமன்றத்திற்கு தலைப்பை பார்த்தீர்களன்றால் கவர்ச்சியாக இருக்கும்.

பழைய பாட்டா - புதிய பாட்டா? ,

பட்டுக்கோட்டையா- கண்ணதாசனா?

பிறந்த வீடா - புகுந்தவீடா?

கலைஞர் என்.எஸ்.கே. அவர்கள் சிரிக்க வைத்தாரா -சிந்திக்க வைத்தாரா?

இதெல்லாம் அவருடைய ஃபேமஸான பட்டிமன்றத் தலைப்புகள். எந்தத் தலைப்புகளில் பேசினாலும் சிரிக்க வைப்பார்; சிரிக்க வைப்பது மட்டுமல்ல, சிந்திக்கவும் வைப்பார். அதுதான் அவருடைய சிறப்பு. இன்னும் சொல்லவேண்டும் என்றால், திரைப்படங்களில் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் செய்த அந்தப் பணிகளை மேடைகளில் பேச்சுக்கள் மூலமாக செய்து அதில் வெற்றி கண்டவர் நம்முடைய லியோனி அவர்கள்.

சிலருக்கு சிலதுதான் ‘ஹோம் கிரவுண்ட்’. ஆனால் லியோனிக்கு எல்லாமே ‘ஹோம் பிட்ச்’தான். எல்லா துறைகளிலும் ‘ஆல் ரவுண்டர்’அவர். ப்ளேயரா இருந்து ‘சிக்ஸர்’ அடித்ததை பார்த்திருக்கிறோம்; ஆனால் இவர் ‘அம்ப்யரா’ இருப்பார், நடுவராக இருப்பால் இவர் ‘சிக்ஸர்’ அடிப்பார். ‘அம்ப்யரா’இருந்து கொண்டோ சிக்ஸர் அடித்தவர், அடித்துக்கொண்டே இருப்பவர் நம்முடைய லியோனி அவர்கள்.

இலக்கியம், அரசியல், ஆன்மீகம், குடும்பம், சினிமா என்று எல்லாத் தலைப்புகளிலும் அவர் புகுந்து விளையாடுவார். மேடைகளில் பேசுகிற எல்லோரும் வெற்றி பெறுவது இல்லை. ஆனால், அவர் வெற்றி பெற்று கால் நூற்றாண்டு காலமாக, தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டு, தன்னுடைய வெற்றியை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்.

எங்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியமாக இருக்கும், எங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே. எப்படி இவ்வளவு பாட்டுகளையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். இவருக்கு இசை தெரியுமா?-என்று எல்லோரும் சந்தேகப்படுவார்கள். அதற்கெல்லாம் பதில்தான், அவரே எழுதியிருக்கின்ற இந்தப் 'வளர்ந்த கதை சொல்லவா?'-என்கிற தன்வரலாறு. இதில் இருந்து என் மனம்கவர்ந்த சில பகுதிகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

அவரே குறிப்பிட்டிருக்கிறார், இவர் வீட்டில் ரேடியோ இல்லை. ஆனால், பக்கத்து வீட்டிற்குச் சென்று அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகக்கூடிய 'சூரியகாந்தி'-என்ற நிகழ்ச்சியைக் கேட்டு - அந்தப் பாடல்கள் அப்படியே மனப்பாடம் செய்திருக்கிறார்.

எட்டாவது படிக்கிற வரைக்கும் இவருடைய குரல், பெண் குரலாக இருந்திருக்கிறது. அவரே எழுதியிருக்கிறார். பி.சுசிலா பாடல்களைத்தான் அதிகம் பாடியிருக்கிறார். அதன்பிறகுதான் குரல் மாறி இருக்கிறது. இதையெல்லாம் வெளிப்படையாகவே நம்முடைய லியோனி அவர்கள் எழுதி காட்டி இருக்கிறார்.

இன்னொன்றும் சொல்கிறார், எல்லோருக்கும் அவரவர்களுடைய, அப்பாதான் முதல் ஹீரோ. அப்படி தன்னுடைய அப்பாவை எந்த அளவுக்கு ஹீரோவாக பார்த்திருக்கிறார் என்றும் விரிவாக இந்த நூலில் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

அதேபோல, தன்னுடைய வளர்ச்சிக்கு யார் யார் உறுதுணையாக இருந்தார்களோ அவர்களை மறக்காமலும் குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு ஆசிரியராக இருந்தவர்கள் பெரும்புலவர் இராமசாமி, இரட்சண்ய தாசன் ஆகிய இருவர். அந்த இருவரில் பெரும்புலவர் இராமசாமிதான் இவருக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்திருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் பட்டமளிப்பு விழா பேருரையை அண்ணாவின் குரலிலேயே அவரது ஆசிரியர் வாசித்திருக்கிறார். இவர்கள் இருவரும் பெரிய பேச்சாளர்களாக இருந்துள்ளார்கள்.

அவர்களைப் பார்த்துதான் பேச்சாளராக ஆகியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவருக்குள் திறமை இருந்த காரணத்தால், அதனை தூண்டிவிடுபவர்களாக அவரது ஆசிரியர்கள் இருந்துள்ளார்கள். எந்த திறமையாக இருந்தாலும் வெளியில் இருந்து திணித்துவிட முடியாது. உள்ளுக்குளேயே இருக்க வேண்டும். அது உள்ளேயே இருக்க வேண்டும். அந்த வகையில் அனைத்துத் திறமைகளையும் உள்ளடக்கியவராக லியோனி அவர்கள் சிறுவயதிலேயே இருந்திருக்கிறார்.

வானொலியில் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மனதுக்குள் பதிய வைத்துக்கொண்டு, எதைச் சொன்னாலும் சுவையாகச் சொல்வது - ஆகியவைதான் அவருடைய வெற்றிக்கே காரணமாக அமைந்திருக்கிறது. அவரது ஆர்வம், சிந்தனை, திறன், எதையும் நகைச்சுவையாக எடுத்துச் சொல்லக்கூடிய அந்த ஆற்றல் மிகச் சிறுவயதில் இருந்தே அவருக்கு இருந்திருக்கிறது.

கேட்பார் அனைவரையும் ஈர்த்த பேச்சு 'காந்தம்' லியோனி. அவர் வளர்ந்த கதையும் நெஞ்சை ஈர்க்கிறது.

லியோனி அவர்கள் வளர்ந்த கதையாக மட்டுமல்ல, அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியவராகவும் இன்றைக்கு அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். வளர்ந்து வரும் பேச்சாளர்கள் படிக்க வேண்டிய பாடமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. 'இன்றைய இளைஞர்களுக்கு இதையெல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்கள், பேச்சாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஏராளமான செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களையும், தலைவர் கலைஞர் அவர்களையும் தன்னுடைய மானசீக குருவாக அவர் நினைத்து தன்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார். அவரே சொன்னார், கலைஞர் இடையிலே வந்தால் தன்னுடைய நிகழ்ச்சி கெட்டுவிடும் என்பதற்காக தனி அறையில் உட்கார்ந்து கேட்டுவிட்டு அதற்கு பிறகு நான் அவரை உள்ளே அழைத்துக்கொண்டு சென்று அறிமுகப்படுத்தியபோது எனக்கு ஒரு முத்தம் கொடுத்தார் என்று சொன்னார். ஒரு முறையல்ல, மூன்றுமுறை முத்தம் கொடுத்திருக்கிறார் என்று கூட எழுதியிருக்கிறார்.

இதைவிட பெரிய பாராட்டு யாருக்கு கிடைக்கப்போகிறது? முத்தமிழ் வித்தகரே முத்தம் கொடுத்திருக்கிறார். அதுவும் மூன்று முறை.

நான் முன்பே குறிப்பிட்டதைப்போல 1996-ஆம் ஆண்டு இளைஞரணி சார்பில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு பவளவிழா நடைபெற்றபோது, அதில் லியோனி தலைமையில் பட்டிமன்றம் வைக்கலாம் என்று நான் தான் ஏற்பாடு செய்தேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவரது அரசியல் பணியா? இலக்கியப் பணியா? என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தலைவர் தாமதமாக வந்த அந்த செய்திகளை எல்லாம் அவரே இங்கே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் - சட்டமன்றத்தினுடைய தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்பினுடைய தேர்தலாக இருந்தாலும், அது எந்த தேர்தலாக இருந்தாலும், கழகத்துக்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்யக்கூடிய ஒருவராக நம்முடைய லியோனி அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியராகவும் பணியாற்றிய அவர் அதன் அடையாளமாகத் தான் கழக அரசு மலர்ந்ததும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நாம் அவரை நியமித்திருக்கிறோம்.

2011-ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியர் பணியில் இருந்து விலகியபோது, பாடப்புத்தகத்தை கீழே வைத்தேன். இப்போது மீண்டும் அதனை தூக்க வைத்துவிட்டார் முதலமைச்சர் என்று லியோனி எழுதி இருக்கிறார். ஆசிரியப்பணியில் இருந்து விலகினாலும் பாடப்புத்தகங்களில் இருந்து அவரால் விலகமுடியாது.

இன்றைய தினம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்தளவு செயல்பட லியோனியின் ஆர்வம் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது.

அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, ஓராண்டு காலத்தில் 6 புத்தகம் தான் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடத்தில் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு 120 புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முழு காரணம் நம்முடைய லியோனியினுடைய சீரிய முயற்சிதான். இன்னும் 150 புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது.

* திசை தோறும் திராவிடம்

* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்

* இளந்தளிர் இலக்கியத் திட்டம்

* கலைக்களஞ்சியம்

* சிறுவர் கலைக்களஞ்சியம்

* பேராசிரியர் அன்பழகன் நூல் திரட்டு

* ஆங்கிலத்தில் கலைஞரின் குறளோவியம்

* ஆங்கிலத்தில் மாபெரும் தமிழ்க்கனவு

* ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் - என்று எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் பாடநூல் கழக புத்தகங்கள் செல்கிறது.

புத்தகத் திருவிழாக்களில் பாடநூல்கழக புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

பள்ளிக் கல்வி வளாகத்தில் பேராசிரியர் பெயரால் அமைந்த புத்தக மையத்தை இளைஞர் நலத் துறை அமைச்சர் திரு. உதயநிதி கடந்த மாதம் திறந்து வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு புத்தகப் புரட்சி நடக்க லியோனியின் பணிகள் காரணமாக அமைந்திருக்கிறது என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

” 'நாவரசர்' திண்டுக்கல் ஐ. லியோனி".. நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பள்ளியில், அறிவியல் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் அனைவருக்குமான பாடநூல் கழகத்தின் தலைவராக இருந்து பணியாற்றி வருவது அவரது திறமைக்கு உயரமான பொறுப்பு கிடைத்திருப்பதை நான் எண்ணி மகிழ்வடைகிறேன். அந்தப் பொறுப்பை நான் வழங்கினேன் என்று சொன்னார், தயவுசெய்து திருத்திக் கொள்ளுங்கள்.

அந்த பொறுப்பு தகுதியானவருக்குத் தான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன். வழங்கினேன் என்று சொல்வதைவிட, போய் சேர்ந்திருக்கிறது அதுதான் உண்மை.

'எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்' என்ற நோக்கத்துடன் பேசிவரும் திண்டுக்கல் லியோனி அவர்களை நானும் உங்கள் அனைவரின் சார்பில் பாராட்டுகிறேன். இத்தோடு நிறுத்தி விடாதீர்கள். இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதுங்கள். பாலு அவர்களுக்கும் நான் சொல்லியிருக்கிறேன். ஒரே விழாவோடு நிறுத்திவிடாதீர்கள். இன்னும் பல விழாக்கள் காணக்கூடிய பல புத்தகங்கள் எழுதுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

நானும், உங்களில் ஒருவன் என்று முதல் தொகுப்பு, இப்போது இரண்டாவது தொகுப்பு என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். கழக முன்னோடிகள், கழக தோழர்கள் எல்லாம் மீண்டும், மீண்டும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது உங்கள் சொந்த அனுபவங்களை கழகத்தில் பணியாற்றிய அந்த அமைப்புக்களை அதில் நீங்கள் சந்தித்த தியாகங்கள், உங்களுடைய செயல்பாடுகள் அதை தொகுத்து எழுதினாலே ஒரு பெரிய வரலாறு கிடைத்துவிடும். ஆகவே, அதை லியோனி அவர்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இதை என்னுடைய வேண்டுகோளாக இந்த நேரத்தில் எடுத்து வைத்து, அவர் எழுதி இருப்பதை அத்தனையும் பாதி ராசா அவர்கள் சொன்னார்கள், மீதம் பாலு அவர்கள் சொன்னார்கள். இன்னும் சிலவற்றை நான் சொல்லியிருக்கிறேன். ஆக, எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் வாங்குகிறவர்கள், வாங்காமல் போய்விடுவார்கள். அதுவும் எனக்கு அச்சமிருக்கிறது. அதனால் நாங்கள் சொல்லிவிட்டோம் என்பதால் நீங்கள் வாங்காமல் போய்விடாதீர்கள். போகக்கூடியவர்கள் அத்தனை பேரும், வந்திருக்கக்கூடியவர்கள் அத்தனை பேரும் அந்த புத்தகத்தை வாங்குங்கள். அதன் மூலமாக அவருடைய அனுபவங்களை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்றவகையில், நீங்களும் வழிநடை அமைத்துக் கொள்ளுங்கள் என்று இந்த நேரத்தில் உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு, லியோனி அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் இந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்து என்ன பாராட்டியிருப்பாரோ அதே உணர்வோடு நானும், அவருடைய பணிக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இந்த அளவில் என் உரையை நிறைவு செய்து கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories