தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (25.03.2023) மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்பமை உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டாக்டர் டி.ஒய். சந்திரசூட் அவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜு அவர்கள் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- I welcome you to Madurai. The land were Kannagi, stood up against a mighty king to get Justice.
“பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதே எனது முன்னுரிமை. நாட்டில் உள்ள அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன்" என்று சொல்லி தலைமை நீதியரசராகப் பதவியேற்றுக் கொண்ட தாங்கள், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் தங்களுக்குத் தனிப் பாசம் உண்டு! கோவிட் இரண்டாவது அலையின்போது, அதைக் கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கியது என்று, நமது மருத்துவ உட்கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை தலைமை நீதியரசர் அவர்கள் ஒரு வழக்கின்போது பாராட்டியிருந்தார். அதற்காக நான் இந்த நேரத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்!
“தொழில்நுட்பம், பதிவகம் மற்றும் நீதித் துறைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்”என்று அவர் பொறுப்பேற்றபோது சொன்னதற்கேற்ப, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமீபத்தில் வெளியாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!
தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, சிறப்பான தீர்ப்புகளை வழங்கி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்பமை நீதியரசர்கள் திரு. ராமசுப்பிரமணியம்,
திரு. எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோருக்கும், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதியரசர் மாண்பமை திரு. ராஜா ஆகியோருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சீர்மிகு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். 1973-ஆம் ஆண்டு முதல் முயற்சி செய்து, 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் தலைவர் கலைஞர் தலைமையில் அடிக்கல் நாட்டி, தென் மாவட்ட மக்களின் கனவை கலைஞர் நனவாக்கினார். இன்று அந்த மாபெரும் கட்டடம் கம்பீரமாக நிற்கிறது.
இதனை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காக தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படும் அரசு, திமுக அரசு என்பதை நினைவூட்டுவதற்காகத்தான். நீதி நிருவாகம், சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாகவும், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையிலும், நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உட்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கு முன்னுரிமை அளித்து, செயல்பட்டு வருகிறது.
➢ இந்த அரசு பதவியேற்ற 2021 மே மாதம் முதல், இன்றுவரையில், புதிய நீதிமன்றங்களை அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி 106 கோடியே 77 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
➢ 6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள்,
7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 44 புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
➢ 3 வணிகச் சட்டங்களுக்கான தனி நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி நிலையில், கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
➢ கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
➢ சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக, 315 கோடி ரூபாய் செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
➢ டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க 23 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
➢ புதியதாக நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்புக் கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளுக்கு 297 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
➢ வழக்குரைஞர் நல நிதிக்கு அரசு சார்பில் 8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
➢ புதியதாக பதிவு செய்யப்பட்ட 1000 இளம் வழக்குரைஞர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கிட ஒப்பளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
➢ தமிழ்நாடு வழக்குரைஞர்களின் எழுத்தர் நலநிதியிலிருந்து 4 இலட்சம் ரூபாய், இறந்த வழக்குரைஞர்களின் எழுத்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு செயல்களை செய்து வருகிறோம். அவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல நேரம் இடம் தராது. எனவே, நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் என்று இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
On this occasion, I place Three important demands. I request the Honourable CJ of India for ensuring social justice in the appointment of Judges to High Courts and Supreme Court as well as, Proportionate reclamation to states in Supreme Court Bench. For allowing Tamil as the Court language in Madras High Court along with English. In this regard, I am aware that Honourable Union Law Minister is in favour of this. I thank him for that. Hence, I request the support of Hon’ble of Chief Justice of India to consider this favourably. For establishing Supreme Court Benches atleast in the cities of Chennai, Mumbai and Kolkatta. We have already written on all these demands to the Union Government. I hope the Hon’ble Chief Justice and Hon’ble Union Minister for Law will consider our demands favourably.
எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசும், நீதித் துறையும், உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றித் தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையானது சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமனியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புக்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.