தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் "மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்" என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் தன் 23 ஆண்டு கால வாழ்க்கை வரலாறு குறித்து எழுதிய "உங்களில் ஒருவன்" புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்து ஆசி பெற்று மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின் போது, தி.மு.கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, துணை பொது செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முத்துசாமி, சிவசங்கர், சி.வி.கணேசன், மெய்யநாதன், சக்கரபாணி, ரகுபதி, மூர்த்தி, தா.மோ.அன்பரசன், கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், பிரபாகர் ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.