மு.க.ஸ்டாலின்

“ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துவிடக் கூடாது" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுமாறு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துவிடக் கூடாது" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுக! மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டிடுக!” என பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லண்டனில் அம்பிகை என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இத்தீர்மானம் நிறைவேற நடவடிக்கை எடுத்திடுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்திற்குப் பொறுப்பான இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி இலண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சகோதரி அம்பிகையின் உணர்விற்கும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் உணர்விற்கும் - தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழர்களின் மீது தமிழ்நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களுக்கு இருக்கும் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இதே கோரிக்கையை இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக, ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்வைத்திருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தக் கோரிக்கைகளை ஆதரித்து பிரதமருக்குக் கடந்த ஜனவரி மாதத்திலேயே கடிதம் எழுதி - அதில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அக்கடிதத்தில், “கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46-வது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு - இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆகவே, ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தத் தருணத்தில், ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும் - இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும் - அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும் எனவும் - இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories