மு.க.ஸ்டாலின்

“ அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை மார்ச் 7ல் வெளியிட இருக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் அடுத்த 10 ஆண்டுகளில் முதலிடம் பிடிப்பதற்கான தொலைநோக்கு திட்டம் குறித்த லட்சியப் பிரகடனத்தைத் திருச்சியில் வரும் மார்ச் 7ம் தேதி மு.க.ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார்.

“ அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை மார்ச் 7ல் வெளியிட இருக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (01.03.2021) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:

“அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் மக்களெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. அதற்கான பரப்புரையைக் கடந்த சில மாதங்களாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் – எங்களுடைய முன்னணித் தலைவர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

நேற்றிலிருந்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் 7-ஆம் தேதி திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளைக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் நேரு மேற்கொண்டு இருக்கிறார்கள்.

“ அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை மார்ச் 7ல் வெளியிட இருக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

7-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான இலட்சியப் பிரகடனத்தை தமிழகத்திற்கான, தொலைநோக்குப் பார்வையை நான் வெளியிட இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எனது தொலை நோக்குப் பார்வையை அந்த நிகழ்ச்சியில் வெளியிடவிருக்கிறேன்.

அடுத்த 10 ஆண்டிற்குள்ளாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வரும் சூழ்நிலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம். இதனைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய இலக்கையும் அதில் நான் வரையறுத்திருக்கிறேன்.

இதுவரை தமிழக மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் அடிப்படையில் கழக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடல்களை எல்லாம் தொகுத்து அந்தத் தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 7 அன்று திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்தத் தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை நான் வெளியிடவிருக்கிறேன். தமிழகத்திற்கான எனது தொலைநோக்குப் பார்வை அறிக்கையினை, அடுத்த 20 நாட்களுக்குள்ளாக 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

அதை நமது கழக உடன்பிறப்புகள் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், ஊராட்சி, கிளைகள், வார்டுகள், கிராமங்கள் அளவில், பட்டிதொட்டிகள் தோறும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.

இந்தத் தொலைநோக்குப் பார்வை எப்படி அமைந்திருக்கிறது? எப்படி அமையவிருக்கிறது? அதை எப்படித் திருச்சியில் நாங்கள் அறிவிக்கவிருக்கிறோம்? என்பது பற்றிய விவரங்களை எல்லாம் விரைவில் தலைமைக் கழகத்தின் சார்பில் முழுமையாக ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

செய்தியாளர்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக உங்கள் பிறந்தநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் பிறந்தநாளை முன்னிட்டு என்ன சொல்லவிருக்கிறீர்கள்?

கழகத் தலைவர்: இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள் செய்தியிலேயே சொல்லியிருக்கிறேனே. இன்றைக்கு ஊதாரித்தனமான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியை மாற்றுவதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் தாண்டி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பணியாற்றுவதில் இருந்து என்றைக்கும் தி.மு.க. பின்வாங்காது. எப்படி கொரோனா நோயில் பாதிக்கப்பட்டபோது மக்களுக்கு துணைநின்றோமோ, அதேபோல் தொடர்ந்து எந்த நிலையில் இருந்தாலும் தி.மு.க. மக்களுக்கு பணியாற்றும் என்பதைத்தான் என்னுடைய பிறந்தநாள் செய்தியாக நான் சொல்லிக்கொள்கிறேன்.

செய்தியாளர்: நேற்றைக்கு அமித்ஷா அவர்கள் தி.மு.க. மீது பல்வேறு புகார்களை விழுப்புரம் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. – பா.ஜ.க. டபுள் இன்ஜின் மாதிரி செயல்படும் என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கழகத் தலைவர்: அதாவது ஏற்கனவே மோடி அவர்கள் பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது அமித்ஷா அவர்கள் பேசி இருக்கிறார். நாளைக்கு மத்தியில் இருந்து – பா.ஜ.க.விலிருந்து வருபவர்கள் அத்தனை பேரும் அதைத்தான் பேசப்போகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால், ஊழல்களையே செய்து, ஊழலிலேயே ஊதாரித்தனமாக இருந்து, ஊழலிலேயே பிறந்து, ஊழலிலேயே வளர்ந்து, கரப்ஷன் - கமிஷன் - கலெக்சன் செய்து கொண்டிருக்கும் ஓ.பி.எஸ். ஒரு பக்கமும், ஈ.பி.எஸ். ஒரு பக்கமுமாக இருவரது கரங்களைத்தான் பிடித்துத் தூக்கி உயர்த்திக் காட்டினார்கள். அதிலிருந்து ஊழலுக்கு யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

செய்தியாளர்: தற்போது ஆட்சியில் கடன் அதிகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த அரசின் கடன் அதிகமாக இருந்துகொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்தக் கடன் அதிகரிப்பதைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

கழகத் தலைவர்: நிச்சயமாக… நிச்சயமாக… அதெல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். அப்போது பாருங்கள்.”

இவ்வாறு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories