தனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு காணொலி வாயிலாக பிறந்த நாள் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-
“மார்ச் 1 - எனது பிறந்த நாள்!
தமிழ்ச் சமுதாயத்துக்காக என்னை நானே அர்ப்பணித்துச் செயல்பட்டு வருவதில் மேலும் ஒரு ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன்.
எந்த ஒரு மனிதரின் பிறந்தநாளையும், அவர் கொண்டாடுவதை விட, அடுத்தவர் கொண்டாடும் அளவுக்கு வாழ வேண்டும் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்படித்தான் இந்த தமிழ்ச் சமுதாயத்துக்காக 16 வயதில் இருந்து கடந்த 50 ஆண்டு காலமாக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.
பிறந்த நாள் என்பது வெறும் கொண்டாட்டத்துக்கான நாளாக மட்டுமே நான் கருதுவது இல்லை. அது அடுத்தவர்களுக்கு பயன்தரத் தக்க நாளாக அமைய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், ''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்று சொன்னார்கள். இந்த வாழ்வியல் இலக்கணத்தை, அரசியல் இலக்கணமாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.
கடந்த ஓராண்டு காலம் கொரோனா காலம். உலகத்தையே வைரஸ் அச்சுறுத்திய காலத்திலும் கழக உடன்பிறப்புகள்தான் வீதியில் நின்று மக்களின் வாழ்க்கையைக் காக்கவும் போராடினார்கள். தொண்டர்களோடு தொண்டர்களாக நானும் நின்றேன். பசிப்பிணி போக்கினோம்.
உணவைத் தயாரித்துக் கொடுத்தோம். இல்லாதவர்க்கு எல்லாம் கொடுத்தோம். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்குக் கழகமே ஆதாரமாக இருந்தது. அந்தத் தொண்டின் தொடர்ச்சி, இந்தப் பிறந்தநாள் விழாவின் போதும் தொடரட்டும்!
ஏழை எளிய மக்களுக்கு தேவையானதைக் கொடுங்கள். மாணவ மாணவியர்க்கு எழுது பொருள்கள், குறிப்பேடுகள் கொடுங்கள். இலவச மருத்துவ முகாம்களை நடத்துங்கள். இரத்த தானம் செய்யுங்கள்.
கண்தானம் செய்யுங்கள். இருப்பதை இல்லாதவர்க்குத் தருவோம் என்பதன் மூலமாக அண்ணாவின் பொன்மொழியைக் காப்பாற்றுவோம். இதன் மூலமாக மக்கள் காட்டும் நன்றிப் புன்னகைக்கு இணையான வாழ்த்து வேறு எதுவும் இருக்க முடியாது.
கழகம் எப்போதும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று அடையாளப்படுத்தப்படுவது இல்லை. எப்போதும் மக்களின் கட்சியாகவே அடையாளப்படுத்தப்படும். அந்த நற்பெயரை எந்நாளும் காப்போம்!
இன்னும் இரண்டே மாதங்கள்தான் இருக்கின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க இருக்கிறது. கழகம் அரியணையில் அமர இருக்கிறது. கோட்டையைக் கைப்பற்ற இருக்கிறது. மக்கள் நமக்கு வழங்க இருக்கும் மகத்தான வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை நிச்சயம் அமைப்போம்.
கொள்கையற்ற, உதவாக்கரை, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் நெருங்கி வருகிறது. கழக அரசு, மக்கள் கவலைகளைத் தீர்க்கும் அரசாக இருக்கும். மக்கள் கோரிக்கைகளைச் செயல்படுத்தும் அரசாக இருக்கும். மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும்.
இந்த நம்பிக்கையைத் தமிழக மக்கள் அனைவர் மனங்களிலும் கழக உடன்பிறப்புகள் விதைக்க வேண்டும். கோடிக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சிக்குக் காரணமான அரசாக அது அமையும்.
வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து நமக்கான நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம்! இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு எனது பிறந்தநாள் செய்தி! நன்றி வணக்கம்!” இவ்வாறு அந்தக் காணொலியில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.