“மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நான் சொன்னபோது “ஸ்டாலின் என்ன விவசாயியா?” என்று கேள்வியெழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, இப்போது தலைநகரில் போராடும் விவசாயிகளை “விவசாயிகள் போல் வேடம் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பாரா?” என கிருஷ்ணகிரி ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (02-12-2020) கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“பசுமையான பள்ளத்தாக்குகளும், மலைகளும் குன்றுகளும் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் ‘தமிழகம் மீட்போம்’ என்ற எழுச்சிமிகு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'தமிழ்நாட்டின் நுழைவாயில்' என்று போற்றப்பட்டது இந்த கிருஷ்ணகிரி பகுதி. தமிழகத்தின் எல்லை நகர் என்று அழைக்கப்பட்ட பகுதி இது. அந்த எல்லை நகரில், தமிழகத்தின் தொல்லையாட்சிக்கு முடிவு கட்டக் கூடியிருக்கிறோம்.
நெல்லும் கரும்பும், கேழ்வரகும் பயறுவகைகளும், மாம்பழமும் தேங்காயும், பருத்தியும் வாழையும் செழித்து நிற்கும் விவசாய பூமிதான் இந்த கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆலமரம் போல் அகலமாகவும், வேம்பைப் போல் ஆழமாகவும் வளர்த்து வருகின்ற தீரர்கள்தான் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் தளி பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகிய இருவரும்.
மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்து கழகம் வளர்த்தல் - சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றுதல் - இரண்டையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் அவர்கள் இருவரையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த மாவட்டம் உதயமானதற்குப் பின்பு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை இந்த கிருஷ்ணகிரி மாவட்டம் பெற்றது!
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மிகப்பெரிய அளவிலான காவலர்கள் குடியிருப்பு, கிருஷ்ணகிரியில் புதிய பேருந்து நிலையம், ஓசூரில் புதிய பேருந்து நிலையம், கிருஷ்ணகிரியில் மாவட்ட நூலகம், கிருஷ்ணகிரியில் மிகப் பிரம்மாண்டமான மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்திற்குள் மாணவர்கள் தங்கும் விடுதி, உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குப் பிரம்மாண்டமான புதிய கட்டடம், கிருஷ்ணகிரியில் பாதாளச் சாக்கடை திட்டம், கிருஷ்ணகிரியில் எரிவாயு தகனமேடை - இவை அனைத்தும் கழக ஆட்சியில் 2006-11 காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டன.
தலைவர் கலைஞர் அவர்கள் முதல் முறை முதலமைச்சராக ஆனபோது சிப்காட் என்ற அமைப்பைத் தொடங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த சிப்காட் சார்பில் ஓசூரில்தான் சிப்காட் தொழில்பேட்டைகளை அமைத்தார். தொழில் நகரமான ஓசூரில் முதல் சிப்காட், இரண்டாவது சிப்காட், மூன்றாவது சிப்காட் என அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
ஓசூர் விசுவநாதபுரத்தில் ஐ.டி. பார்க் அமைத்தவர் கலைஞர். கிருஷ்ணகிரி போல்பள்ளியில் சிப்காட் கொண்டுவந்து அதனால் இன்றைக்கு லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் முதலமைச்சர் கலைஞர். பெங்களூருக்கு நிகராக ஓசூர் ஒரு மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர். இன்றைக்கு குண்டூசி முதல் ஆகாய விமான பாகங்கள் வரை உற்பத்திக்கு ஏதுவாக அமைந்துள்ளது ஓசூர் மாநகரம். அதற்கு அடித்தளம் அமைத்தது கழக ஆட்சி.
அதுமட்டுமல்லாது கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் முழு அளவுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. வேப்பனப்பள்ளி, கெலமங்கலம், அஞ்செட்டி, ஆலப்பட்டி, மேகலசின்னம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனை, போச்சம்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட அரசு புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக இன்று கிருஷ்ணகிரியைச் சுற்றிலும் தங்க நாற்கரச் சாலைகள் மின்னுகிறது என்றால் அது மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி அரசின் சாதனை ஆகும். இத்தகைய சாதனைகளைச் செய்தவர்கள் நாம் என்பதால் தான் இன்று தமிழ்நாட்டில் நெஞ்சை நிமிர்த்தி நம்மால் வலம் வர முடிகிறது.
ஒரு முறையல்ல; ஐந்து முறை ஆட்சிக்கு வந்தோம். ஏராளமான சாதனைகளைச் செய்தோம். இந்த மாவட்டம், அந்த மாவட்டம் என்று பேதம் பார்க்கவில்லை. எல்லா மாவட்டங்களுக்கும் சரி சமமான திட்டங்களைக் கொடுத்தோம். அந்தச் சமூகம், இந்தச் சமூகம் என்ற பேதம் பார்க்காமல் அனைத்து சமூகத்தினருக்கும் நன்மைகள் செய்யும் அரசாக இருந்தது தி.மு.க அரசு. பெரும்பான்மை இந்துச் சமூகமாக இருந்தாலும் - சிறுபான்மை இசுலாமிய, கிறித்துவ சமுதாயமாக இருந்தாலும் அவர்களது மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அரசாக தி.மு.க அரசு இருந்தது. ஏழைகள் ஏற்றம் பெற பல்வேறு சமூக நலத் திட்டங்களைச் செய்து கொடுத்ததும் தி.மு.க அரசுதான். சிறு - குறு தொழில் நிறுவனங்கள் மேன்மை அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததும் கலைஞர் அரசுதான். பெரிய தொழில் நிறுவனங்கள், நிம்மதியாகத் தொழில் செய்யவும் அதனை விரிவு செய்யவும் வளர்ச்சி அடையவும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சலுகைகள் பெற்றார்கள். சம்பள உயர்வைப் பெற்றார்கள். தொழிலாளர்கள் உரிமை பெற்றார்கள். பெண்கள் முன்னேற்றம் அடைந்தார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வியைக் கொடுத்தோம். எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி இந்தத் தமிழினம் செல்ல எல்லாப் பாதைகளையும் திறந்து விட்டது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதனால்தான் கம்பீரமாக நான் இந்த மேடையில் நிற்கிறேன். “தமிழ்நாட்டு மக்களே, உங்களுக்கு உழைக்க எங்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று தைரியமாக நான் கேட்கிறேன் என்றால் அதற்குக் காரணம் இதுதான்.
ஆனால் இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. அது எல்லா விதத்திலும் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிய ஆட்சி. இந்த அராஜக, மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து மக்களை மீட்டாக வேண்டும் என்பதற்காகத் தான் ‘தமிழகம் மீட்போம்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிவிட்டது என்று நாம் சொன்னால், 'நான் சிறப்பாக ஆட்சி நடத்துகிறேன், எனக்குப் பலரும் பல விருதுகளைத் தருகிறார்கள், ஸ்டாலின் நற்சான்று பத்திரம் தரவேண்டியது இல்லை' என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
சில நாட்களுக்கு முன்னால் 'இந்தியா டுடே' என்ற பத்திரிகை 'இந்தியாவில் தமிழகம் முதலிடம்' என்று விருது கொடுத்திருப்பதாகத் தமிழக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டது. எல்லாப் பத்திரிகைகளும் அதனைப் பெரிதாக வெளியிட்டன. அரசாங்கமே கட்டாயப்படுத்தி அதனை வெளியிட வைத்தார்கள்.
'இந்தியா டுடே' வெளியிட்ட கட்டுரையை யாராவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையாக எடுத்துச்சொன்னார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால், தமிழகம் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் எப்படி எல்லாம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்றுதான் 'இந்தியா டுடே' பத்திரிகையில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை மட்டும் எடுத்து இந்தியா டுடே பத்திரிகை அளவீடு செய்துள்ளது.
தமிழகம் முதலிடம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, இந்த இந்தியா டுடேவின் புள்ளிவிவரத்தில் எத்தனையாவது இடங்களில் இருக்கிறது என்பதை நான் இப்போது சொல்கிறேன்.
* உள்கட்டமைப்பில் 20-ஆவது இடம்
* ஒட்டுமொத்த செயல்பாட்டில் 19-ஆவது இடம்
* விவசாயத்தில் 19-ஆவது இடம்
* சுற்றுலாவில் 18-ஆவது இடம்
* உள்ளடக்கிய வளர்ச்சியில் 15-ஆவது இடம்
* தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14-ஆவது இடம்
* ஆட்சி நிர்வாகத்தில் 12-ஆவது இடம்
* தூய்மையில் 12-ஆவது இடம்
* சுகாதாரத்தில் 11-ஆவது இடம்
* கல்வியில் 8-ஆவது இடம்
* பொருளாதார வளர்ச்சியில் 8-ஆவது இடம்
* சுற்றுச்சூழலில் 6-ஆவது இடம்
* சட்டம் ஒழுங்கில் 5-ஆவது இடம்
- இதுதான் எடப்பாடி வாங்கிய இடம். கடந்த ஐந்தாண்டுக் காலத்தில், உள்கட்டமைப்பில், செயல்பாட்டில், உள்ளடக்கிய வளர்ச்சியில் 20 மாநிலங்களில் மிக மோசமான மாநிலமாக எது இருக்கிறது என்றால், எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம்தான் இருக்கிறது.
இவர் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார். ஒரு விவசாயி இந்த நாட்டை ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்கிறார். ஆனால் விவசாயத்தில் 19-ஆவது இடத்தில் இருக்கிறது தமிழகம்.
'இந்தியா டுடே' ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் தமிழகம் முதலிடம் என்று சொல்லி இருக்கிறது. அது என்ன என்றால், எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முதலிடம் தமிழகம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் காலம் காலமாகத் தமிழகம் கவனம் செலுத்தி வருகிறது, அதனால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.
தமிழகம் பல ஆண்டுகளாகச் சமூகநீதி, வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்கள் மூலமாக அனைவரையும் முன்னேற்றி வருகிறது என்று இந்தியா டுடே அளித்துள்ள பாராட்டு என்பது தனிப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துள்ள பாராட்டு அல்ல.
இந்த எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் தமிழகம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதையும் இந்தியா டுடே சொல்லி இருக்கிறது.
அனைவருக்கும் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், ஒரு பையன் கடைசி செமஸ்டரில் ஃபெயில் ஆகிவிட்டான். ஆனால் அதற்கு முந்தைய செமஸ்டரில் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் வந்துவிடுகிறான். அந்த நிலைமையில் தான் இப்போது தமிழகம் இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது என்பதுதான் இந்தியா டுடே மூலமாக தெரிய வருகிறது. டுடே தமிழகம் இப்படித்தான் இருக்கிறது!
கடந்த ஒருவார காலமாக இந்தியாவின் தலைநகரான டெல்லி கொந்தளிப்பாக இருக்கிறது. பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் எனப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் லாரிகளிலும் டிராக்டர்களிலும் தலைநகர் டெல்லியை நோக்கி வந்துள்ளார்கள். பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு டிராக்டர்கள் நிற்கிறது. கூட்டம் கூட்டமாக வந்து டெல்லியில் தங்கி இரவும் பகலுமாகப் போராடி வருகிறார்கள். வேளாண்மையைக் காக்க வேண்டிய மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால் வேளாண்மை சிதைந்து போகிறது, அந்த மூன்று சட்டங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். புதிய சட்டங்களால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று அந்த விவசாயிகள் சொல்கிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை தரப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்தப் புதிய சட்டங்களால் பெரு நிறுவனங்கள்தான் பயன்பெறும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதை எல்லாம் சொல்வது யார்… விவசாயிகள்! நித்தமும் நிலத்தில் இறங்கி விவசாயம் செய்யும் விவசாயிகள் சொல்கிறார்கள்.
இதை எல்லாம் நான், கடந்த மூன்று மாதமாகச் சொல்லி வருகிறேன். அப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? 'ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது. அவர் சொல்வதெல்லாம் தவறு' என்று விவசாயியான எடப்பாடி பழனிசாமி சொன்னார். 'ஸ்டாலின் என்ன விவசாயியா?" என்றும் கேட்டார் பழனிசாமி.
நான் விவசாயியும் அல்ல, விவசாயம் செய்ததாகச் சொல்லவும் இல்லை. ஆனால் விவசாயம் செய்து வருவதாகச் சொல்லிக் கொள்ளும் பழனிசாமிக்குத்தான் விவசாயம் என்றால் என்ன என்றே தெரியவில்லை.
நான் சொன்னதைத்தான் இன்று பஞ்சாப் விவசாயிகள், உத்தர பிரதேச விவசாயிகள், மத்தியப்பிரதேச விவசாயிகள், ராஜஸ்தான் விவசாயிகள் சொல்கிறார்கள். இது பற்றி பழனிசாமி என்ன பதில் சொல்வார்?
பஞ்சாப் விவசாயிகளுக்கு, விவசாயம் தெரியவில்லை என்பாரா? அல்லது அவர்கள் விவசாயிகள் அல்ல, விவசாயியைப் போல வேஷம் போட்டுக் கொண்டு டெல்லிக்கு வந்துவிட்டார்கள் என்பாரா?
இவர் தான் ஒரு நாள் நாடகத்துக்காக நிலத்தில் இறங்கி நெல் மணிகளை எடுக்கிறார் - மாடு ஓட்டுகிறார்! இவை அனைத்தும் நானும் விவசாயிதான் என்று காட்டிக்கொள்ள நடத்தும் நாடகங்கள். ஆனால் உண்மையான விவசாயிகள்தான் இன்று தலைநகர் டெல்லியில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர், விவசாயி என்று சொல்லிக் கொண்டு விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்து கொண்டு இருக்கிறார். அதனால் தான் இவர் பச்சைத் துண்டு பழனிசாமி அல்ல, பச்சைத் துரோக பழனிசாமி என்று சொல்லி வருகிறேன்!
விவசாயிகள் கடனை ரத்து செய்ய மாட்டேன் என்று சொல்லி உச்சநீதிமன்றம் வரை போன இவர் ஒரு விவசாயியா?
காவிரி டெல்டா விவசாயத்துக்குக் கர்நாடகாவிலிருந்து தேவையான தண்ணீர் வாங்க முடியாத இவர் ஒரு விவசாயியா?
காவிரி உரிமையைத் தடுக்கும் மேகதாது அணையைத் தடுக்க முடியாத இவர் ஒரு விவசாயியா?
அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் பல பொருள்கள் நீக்கப்பட்டபோது எதிர்க்காத இவர் ஒரு விவசாயியா?
டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும் மக்களை ஒடுக்கும் இவர் ஒரு விவசாயியா?
எட்டுவழிச்சாலைத் திட்டத்தை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிப் போராடும் மக்களைக் கைது செய்யும் இவர் ஒரு விவசாயியா?
வேளாண் மண்டலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படும் என்ற இவர் ஒரு விவசாயியா?
கிசான் திட்டத்தில் போலி நபர்களைச் சேர்த்து முறைகேட்டுக்கு உதவிய இவர் ஒரு விவசாயியா?
குடிமராமத்துப் பணிகளில் ஊழல் செய்த இவர் ஒரு விவசாயியா?
நீர் வள உரிமையைப் பறிக்கும் ஜல்சக்தி திட்டத்தை ஆதரித்த இவர் ஒரு விவசாயியா?
அணைப் பாதுகாப்பு உரிமையை விட்டுத் தந்த இவர் ஒரு விவசாயியா?
சுற்றுச்சூழலை அலட்சியப்படுத்தி வரும் இவர் ஒரு விவசாயியா?
விவசாயத்தையே மொத்தமாக அழிக்கும் மூன்று சட்டங்களை ஆதரிக்கும் இவர் ஒரு விவசாயியா?
விவசாயிகளையே மொத்தமாகச் சிதைக்கும் மூன்று சட்டங்களை ஆதரிக்கும் இவர் ஒரு விவசாயியா?
எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல; விவசாயி என்ற வேடமிட்ட கபட வேடதாரி! என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்!
இந்த நாட்டை ஐந்து முறை ஆண்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். எடப்பாடி பழனிசாமிக்குப் புரிவது மாதிரி சொல்ல வேண்டுமானால் கலைஞர் அவர்கள் விவசாயி அல்ல. ஆனால், அவர் விவசாயிகளுக்குச் செய்தது போன்ற சாதனையில் ஒன்றையாவது பழனிசாமி, தான் செய்ததாகச் சொல்ல முடியுமா?
* தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்குக் குறைந்தபட்சக் கூலி நிர்ணயிப்பதற்காக கணபதியாப்பிள்ளை ஆணையம் அமைத்தது கழக அரசு!
* தஞ்சை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டத்து விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி வரையறை செய்வதற்காக 1973-இல் கார்த்திகேயன் ஆணையம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
புன்செய் நிலங்களுக்கு வரியை நீக்கினார். 5 ஏக்கர் வரை நன்செய் நிலத்துக்கு வரியை நீக்கினார்.
* 1970 ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர். இதனால் 88 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி 38 ஆயிரத்து 504 விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
* குடியிருப்போருக்கே வீட்டுமனை சொந்தம் என்ற முதலமைச்சர் கலைஞரின் திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் பலன் பெற்றார்கள். நாங்கள் ரத்தம் சிந்திப் பெற வேண்டிய உரிமையை ஒரு துளி மையால் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் பாராட்டினார்கள்.
* கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைத் தரவில்லை என்று சொல்லி 1971-ஆம் ஆண்டே காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர். 1990-ஆம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பும் பெறப்பட்டது. கர்நாடக அரசு வழங்கும் நீரைக் கண்காணிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் கலைஞரின் சிந்தனையானது 1999-ஆம் ஆண்டு செயல்வடிவம் பெற்றது. இப்படி காவிரி உரிமையைக் காப்பாற்றியவர் கலைஞர்.
* 1978-ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் மின் கட்டணத்தில் சலுகை கேட்டுப் போராடினார்கள். 1990-ஆம் ஆண்டு மின் கட்டணத்தில் சலுகை அல்ல, மின் கட்டணமே விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு இல்லை என்று அறிவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
* 1989-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சிறுவிவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கழகம் அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும் 106 கோடி ரூபாய் கடன் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் மின்வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய அபராத வட்டியான 10 கோடி ரூபாயைக் கலைஞர் அரசு ரத்து செய்தது.
விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகள் உள்பட அனைத்துப் பொருள்களுக்கும் விற்பனை வரி நீக்கப்பட்டது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மட்டும் நிலவரியாக 365 கோடியை ரத்து செய்தவர் முதலமைச்சர் கலைஞர்.
* 2006-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற மேடையிலேயே 7000 கோடிக்கான கூட்டுறவுக் கடனை ரத்து செய்தவர் முதலமைச்சர் கலைஞர்!
- 'தமிழக உழவர் பெருமக்களை, தமிழகத்தின் பசிப்பிணி மருத்துவர்கள்' என்று சொன்னவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். ஆனால் அந்த உழவர்களை நோயாளிகள் ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேறினால் உழவர்கள், நோயாளிகளாகத்தான் ஆவார்கள். அவர்கள் வாழ்க்கையே சிதைந்து போய்விடும்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் பற்றி எரிகிறது. தமிழகத்துக்கும் பஞ்சாப் மாநிலத்துக்குமான நட்பும் ஒற்றுமையும் அதிகம்! முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக முதல்வரான போது பஞ்சாப் சென்று குருநானக்கின் 500 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்!
“எங்களுக்கு வள்ளுவர்; உங்களுக்கு குருநானக்” என்றும் “எங்களுக்கு கட்டபொம்மன்; உங்களுக்கு பகத்சிங்” என்றும் தலைவர் கலைஞர் குறிப்பிட்டார்! அத்தகைய வீரம் செறிந்த பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்! அவர்கள் முன்னெடுத்த போராட்டம் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகளையும் ஒன்றிணைத்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நாமும் போராட்டக்களம் காண இருக்கிறோம்! நாளைய தினம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது பற்றி ஆலோசித்து விரைவில் போராட்டக்களம் காண்போம்! வேளாண்மையை அழிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைப்போம்!
காவிரி பிரச்சினையில் டெல்டா விவசாயிகளுக்குத் துரோகம்! பசுமை வழிச்சாலையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்குத் துரோகம்! மின்கோபுரங்களால் ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்குத் துரோகம்! ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்குத் துரோகம்! இப்படித் தொடர் துரோகத்தை விவசாயிகளுக்குச் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி, வெட்கம் இல்லாமல் எப்படித் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார்? ஆனால், தினமும் வாய்ச்சவடால்கள் விடுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்தவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னால் மடிப்பாக்கத்தில் நிருபர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஸ்டாலின் மேயராக இருந்தபோது என்ன செய்தார்? உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கான பதிலைக் கடந்த 18-ஆம் தேதி அன்று நடந்த தருமபுரி பொதுக்கூட்டத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மேயராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொன்னேன். அது முதலமைச்சருக்குத் தெரியுமா? அல்லது இரண்டு வாரமாகத் தூக்கத்தில் இருக்கிறாரா?
மடிப்பாக்கம் பகுதி முன்பெல்லாம் மிகப்பெரிய அளவுக்குத் தண்ணீரில் மிதக்கும். தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் காரணமாகத்தான் அது தடுக்கப்பட்டது. இதனை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஸ்டாலின் என்ன செய்தார் என்று நிருபர்களிடம் கேட்கும் பழனிசாமி அவர்களே, அதனைப் பொதுமக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!
சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க புதிய திட்டங்களைப் போடப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. என்ன செய்தது? இப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் இவர் தூங்கிக் கொண்டு இருந்தாரா? 2015-ஆம் ஆண்டு வெள்ளம் வந்ததே அதன்பிறகாவது இந்த அரசு விழித்துக் கொண்டதா? கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்? நான்கு மாதத்தில் ஆட்சியே முடியப் போகிறது. இதுகூடத் தெரியாமல், புதிய திட்டம் போடப்போவதாகப் பந்தாக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. புதிதாகத் திட்டங்களைத் தீட்டப் போகிறோம் என்று சொல்லும் பழனிசாமி, நிதி இல்லை என்றும் சொல்கிறார். அப்படியானால், இவற்றில் எது உண்மை?
நீர் மேலாண்மைக்கு விருது வாங்கியதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவரது ஆட்சியில்தான் சென்னை தண்ணீரில் மிதந்தது. இதுதான் விருதின் லட்சணமா? நீர் மேலாண்மைத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாக சில நாட்களுக்கு முன்னால் சொன்னதும் இவர் தான். இப்போது பணமில்லை என்பதும் இவர்தான்.
அதாவது வாய்க்கு வந்ததைப் பேசுவதுதான் பழனிசாமியின் வழக்கம். நிருபர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அது சம்பந்தமான தகவல் இருக்கிறதோ இல்லையோ, குத்து மதிப்பாக ஏதாவது சொல்லி தப்பித்துவிடுவது அவரது பாணி.
ஆனால், இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பழனிசாமி மறக்கலாம்; மக்கள் மறக்கமாட்டார்கள்!
அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அலியாளம் அணைக்கட்டு கால்வாய் நீட்டிப்பு என்றார்கள்; செய்யவில்லை. அரசம்பட்டி மற்றும் பெண்ட் அள்ளியில் தடுப்பணைகள் என்றார்கள்; அமைக்கவில்லை. சந்தனூர் ஏரியிலிருந்து, கொட்டாவூர் ஏரிக்கு புதிய நீர்வரத்து கால்வாய் அமைப்போம் என்றார்கள்; இதுவரை இல்லை! பொதுப்பணித்துறை புதிய அலுவலகங்கள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு இதுவரை கட்டப்படவில்லை. சூளகிரி புறவழிச்சாலை அறிவிப்பு கிடப்பிலேயே உள்ளது. ஓசூர் நகருக்கு வெளிவட்ட சாலை நில எடுப்புப் பணி அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் கிடப்பில் கிடக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் என்ற அறிவிப்பு அப்படியே கிடப்பில் கிடக்கிறது. புதிய வனக் களஞ்சியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது.
இப்படி சொன்னது எதையும் செய்யவில்லை. சொன்னதைச் செய்ய முடியவில்லை என்றால் எதற்காகச் சொல்லவேண்டும்? எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்? எதற்காக மக்களை ஏமாற்ற வேண்டும்?
மக்களின் அவசியத் தேவைக்குரிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பில் போட்டு அப்படியே மொத்தமாகப் பணம் எடுக்கும் திட்டங்களை மட்டும் செயல்படுத்துவதில் எடப்பாடி அரசு கவனமாக இருக்கிறது. அவர்களுக்கு கரன்சியைப் பற்றித் தான் கவலையே தவிர; மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை!
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான குவாரி டெண்டர் விடப்பட்டது. 18 கல்குவாரிகளை ஏலம் விடும் டெண்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார். கொரோனா காலத்தில் இ-டெண்டர் விடாமல், நேரடி டெண்டரை விட்டுள்ளார்கள். அவசர அவசரமாக விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த டெண்டரை விட்டுள்ளார்கள். சில ஒப்பந்தக்காரர்கள் ஆதாயம் அடைவதற்காக இதைச் செய்துள்ளார்கள் என்று கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 'விதிமுறைகளின்படித் தான் டெண்டர் விட்டோம்' என்று அரசு தரப்பு முதலில் சொன்னது. ஆனால் அடுத்த கட்ட விசாரணையில், அந்த டெண்டரை கேன்சல் செய்துவிட்டதாக அரசே சொல்லிவிட்டது.
இதேபோன்று தருமபுரி மாவட்ட டெண்டர் முறைகேடு தொடர்பாகத் தாமரைச்செல்வனும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த டெண்டர்கள் குறித்து முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒவ்வொன்றில் லாபம் பார்ப்பதற்கு மட்டுமே இவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி! தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெண்ட ஆட்சி! இந்த டெண்டர் ஆட்சிக்கும், தெண்ட ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எல்லா நிலத்திலும் பயிரும் இருக்கும், களையும் இருக்கும். ஒரு விவசாயி, அந்தக் களையை முதலில் எடுத்துக் களைவார். அதன்பிறகுதான் பயிர் சரியாக வளரும். அதேபோல் தமிழ்நாட்டு அரசியலில் உருவான களைகள்தான் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும்.
இந்தக் களைகளை அகற்றாமல் தமிழ்நாட்டைச் செழிக்க வைக்க முடியாது. இந்தக் களைகளை அகற்றும் தேர்தல்தான் சட்டமன்றத் தேர்தல். தமிழக அரசியல் களத்தில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமி கும்பல் என்ற களையைக் கோட்டையிலிருந்து களையவேண்டும்.
தமிழகம் மீட்போம்! தமிழகத்தைச் செழிக்க வைப்போம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.