கோவை சுந்தராபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது இந்துத்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரு நாட்களுக்கு முன்பு காவி சாயத்தை பூசியிருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய நபர் போலிஸில் சரணடைந்தார். இருப்பினும் இது போன்று தலைவர்களின் சிலை அவமதிப்பது தடுக்கப்பட வேண்டும் என பெரியாரிய உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள டவுன்ஹால் என்.எச். சாலை, ரயில் நிலையம் மற்றும் கோட்டைமேடு ஆகிய 3 பகுதிகளில் உள்ள கோவில்கள் முன்பு உள்ள பொருட்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியும், பழைய டயர்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது தீ போல் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்,“கோவை மாவட்டத்தில் நேற்று மூன்று கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.
பேரிடர் காலத்தில் அதி முக்கிய பிரச்னைகளில் இருந்து பொது கவனத்தை திசை திருப்பாத வண்ணம் குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிய் செய்ய வேண்டும்.” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.