தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் அரசின் நிர்வாக குளறுபடிகள் மற்றும் தலைமைப் பண்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக காணொளி காட்சி மூலம் இன்று (ஜூன் 15) நேரலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு வெளியிடும் தகவல்களில் உள்ள குளறுபடிகளையும், நிர்வாகத் திறமையின்மையையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்ததோடு, பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தகவல்களை மறைக்கப்படுவதையும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதையும் அரசு அதிகாரிகளால் வெறும் பிழை என்று கடந்து போவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, கொரோனா கண்டறியப்படும் விகிதமும் 10 சதகிவிதத்தை கடந்திருக்கிறது என்றும் நாட்டின் மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையிலேயே கொரோனா பரவும் விகிதம் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த பெருந்தொற்றை கையால்வதில் அரசு செய்துவரும் பல்வேறு குழப்பங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
1) அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிதியுதவி வழங்குமாறு அரசுக்கு தி.மு.க., பரிந்துரைத்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மொத்த நிதிநிலை அறிக்கையில் 2 சதவிகிதத்துக்கும் குறைவானதே.
2) ஏப்ரல் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட 4 நாள் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி கோயம்பேடு சந்தை உட்பட பல கடைகளில் திரளான கூட்டத்திற்கு வழி வகுத்தது. இதனால் அடுத்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.
3) சோதனைக் கருவிகளை வாங்குவதில் தவறான நடைமுறைகள் இருப்பதை தி.மு.க., பிரச்னையாக எழுப்பிய பின்னரே ஐ.சி.எம்.ஆர்., நிர்ணயித்த தரத்தை பூர்த்தி செய்யாத 24 ஆயிரம் கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டன.
4) கோயம்பேடு சந்தை மூலம் பரவல், டாஸ்மாக் திறப்பு, ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு தேர்வு என்ற அறிவிப்பு போன்றவை சுட்டிக்காட்டப்பட்டன. மேலும் தி.மு.க.,வின் பலகட்ட அறிவுறுத்தலுக்கு பிறகே சோதனை மற்றும் இறப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடுவதும் சமூக பரவல் இருப்பதை அரசாங்கம் மறுப்பது போன்ற பல்வேறு சிக்கல்களும் குறிப்பிடப்பட்டன.
5) இறப்புகளை பதிவு செய்வதில் தாமதம், சென்னையில் சுகாதார உட்கட்டமைப்பு சரிவு, படுக்கைகள், வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மறைத்தல் மற்றும் ஒட்டுமொத்த நெருக்கடியும் எடுத்துக் கூறப்பட்டன.
இதையடுத்து, தமிழக முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் சார்பில் ஐந்து முக்கிய கேள்விகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
அவை,
1. கொரோனா நோய்த் தடுப்பில் அரசு சிறப்பாக பணியாற்றுகிறது என்றும் சமூகப் பரவல் இல்லை என்றும் சொல்வது உண்மையென்றால், ஏன் கொரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப்படிகள் போல் அதிகரித்து வருகிறது?
2. கோவிட் 19ஐ அறவே ஒழிக்கிறோம் என்ற பெயரில் பொய்ப் பேட்டிகளை நிறுத்திவிட்டு உயர்ந்து கொண்டே போகும் கொரோனா நோய்த்தொற்று வரைபடத்தை தட்டையாக்குவதற்கு குறிப்பாக சென்னையில், அப்படிச் செய்வதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
3. ஊரடங்கு காலத்தில் கமிட்டி மேல் கமிட்டி நியமித்துள்ளீர்கள். ஆனால் இதுவரையிலும் எந்தக் கமிட்டியின் அறிக்கையும் பொதுவெளியில் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம் என்று மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?
4. இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள் உள்ளிட்டோருடன் கலந்துபேச ஏன் அரசு தொடக்கத்தில் இருந்து மறுத்து வருகிறது?
5. பேட்டிகள், பெயரளவு அறிவிப்புகளை நிறுத்தி விட்டு கொரோனா பேரிடரின் விளைவாக, நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மாற்றி அமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எப்போது அரசு ஆர்வம் காட்டப்போகிறது?
இது மட்டுமல்லாமல், ஊரடங்கு அறிவித்து 85 நாட்கள் ஆகியும் மரணத்தை முறைப்படி கணக்கெடுக்கும் ஒரு நடைமுறை ஏன் உருவாக்கப்படவில்லை? 236 பேரின் உயிரிழப்பை மறைப்பதை “ரிப்போர்ட்” செய்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் என்று சொல்லி ஒதுக்கி விட சொல்கிறார்களா?
சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த 236 பேரின் மரணம்- அதாவது இரு மடங்கிற்கும் அதிகமானவர்களின் மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளதுதான் கவலையளிக்கிறது. கணக்கில் வராத 236 பேரின் மரணங்கள் என்பது ஏதோ புள்ளிவிவரம் மட்டுமல்ல. யாரோ ஒருவருக்கு மகனாகவோ, மகளாகவோ, அன்பிற்கும் பிரியத்திற்கும் உரியவர்களாகவோ, குடும்ப உறுப்பினர்களாகவோ இருந்து உயிரை இழந்தவர்கள். இறப்பில் கூட இந்த 236 பேரின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் மூலம் மறைக்கப்படும் இந்த மரணங்கள் குறித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அடையும் துயரங்களை இந்த அரசு புரிந்து கொள்ளுமா?
சாதாரணமாக, ஒரு மரணத்தைப் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி 21 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் இதுபோன்ற கொரோனா காலத்தில் மரணங்களை வெளியிட ஏன் தாமதம்? மரணங்கள் பற்றிய தகவல்களே இல்லாமல் அரசு எப்படி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கிறது? இவ்வாறு பல கிடுக்குப்பிடி கேள்விக் கணைகளை அரசுக்கு தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் தொடுத்துள்ளார்.