மு.க.ஸ்டாலின்

கொரோனா குளறுபடிகள்: அதிமுக அரசின் அலட்சியமே வைரஸ் பரவலுக்கு காரணம் - மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்கிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

MK Stalin
MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிமுக அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான தரவுகளுடன் இன்று காணொளி காட்சி மூலம் நேரலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதன் முழு விவரம் பின்வருமாறு:-

கொரோனா நோய்த் தொற்றால் தமிழகம் கடந்த 2 மாதங்களாக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வரும் வேளையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இறப்பு எண்ணிக்கையும் மாநிலத்தில் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் தமிழகத்தின் நிலை குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாநில அரசோ நோயை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், நோய் குறித்த தகவல்களை மறைக்கும் ஆளும் அரசின் போக்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்து வெளிப்படைத்தன்மை பேணாமல் இருப்பதை தவறு என சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அரசின் பொறுப்பற்ற செயலால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். மார்ச் 7ம் தேதி தமிழகத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். மார்ச் 21ம் தேதி மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இடைப்பட்ட இரண்டு வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொரோனா குளறுபடிகள்: அதிமுக அரசின் அலட்சியமே வைரஸ் பரவலுக்கு காரணம் - மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

முதற்கட்ட ஊரடங்கின் போது சராசரியாக தினமும் 40 பேர் என்ற அளவில் 1204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 2வது ஊரடங்கின் போது 2750 பேர் தினமும் 101 பேர் அளவில் பாதிக்கப்பட்டார்கள். மே3 முதல் 17ம் தேதி வரையில் தினமும் சராசரியாக 586 பேர் என 8201 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

4வது கட்டத்தின் போது 22 ஆயிரத்து 333 பேர் தினந்தோறும் 904 பேர் என பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைய நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஏப்ரல் 15ம் தேதி 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று இன்று தமிழகத்தில் 10 % ஆக உயர்ந்துள்ளது. 10ல் ஒருவருக்கு கொரோனா இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டுமே நோய்த் தொற்றின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. நாட்டிலேயே நோய் பரவலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதை ஆளும் அதிமுக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நாட்டின் பிற நகரங்களை விட நோய் பரவலின் விகிதம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் ஒப்பிடுகையில் 10 சதவிகித நோயாளிகள் சென்னையில் உள்ளதோடு 5.2 சதவிகிதத்தில் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் மே 31ம் தேதி வரையில் 176 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களில் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைக் கண்டு மாநில அரசுக்கு பதற்றமோ, படபடப்போ வந்ததாக தெரியவில்லை. படிப்படியாக தனக்கு கிடைத்த வாய்ப்பை ஒவ்வொரு நாளும் இந்த அரசு தவறவிட்டு வருகிறது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றேன்.

mk stalin
mk stalin
twitter

தொடக்கத்தில் இருந்தே வைரஸ் பரவலை தடுக்க அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்தடுத்து நோய்த்தொற்று பரவிய போதும் அரசின் அலட்சியத்தால் தமிழக மக்கள் பேரிடரில் சிக்கி தவித்து வருகிறார்கள். முதலமைச்சர் பழனிசாமியின் பொறுப்பின்மையால் இன்று தமிழ்நாடு மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது.

மத்திய தேசிய ஊரடங்கு அறிவித்த பிறகே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்க தொடங்கியது. அதுவரையில் மத்திய அரசின் பொம்மையாக இருந்து குழப்பத்தில் செய்வதறியாது தத்தளித்து வந்தது. மார்ச் 28ம் தேதி ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என தி.மு.க. அறிவுறுத்தியது.

இன்று வரை இந்த கோரிக்கையை தி.மு.க. முன்வைத்து வருகிறது. 2 லட்சம் கோடி ரூபாயில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் இந்த மாநில அரசால் மக்களின் பட்டினியை போக்குவதற்கான நிதியை வழங்க 3850 கோடி ரூபாயை கொடுக்க மறுப்பதற்கு என்ன காரணம்?

கொள்ளை நோய் பரவி வரும் காலத்தில் பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சிகளுடனும் கலந்தாலோசிக்க முடிந்த நிலையில், நம் மாநில முதலமைச்சரிடம் பேச முடியாமல் இருப்பது வேடிக்கையாகவும், வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.

முதற்கட்ட ஊரடங்கை வீணடித்த பிறகு, தேசிய அளவில் 10 லட்சத்தில் 533 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் அதே 10 லட்சத்தில் வெறும் 32 பேரை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தியது தமிழக அரசு. ஏப்ரல் 16ம் தேதி நோயின் தீவிரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு பதிலாக ஏப்ரல் 20க்குள் கொரோனா போய்விடும் என ஒரு மாநில முதலமைச்சரே மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்.

கொரோனா குளறுபடிகள்: அதிமுக அரசின் அலட்சியமே வைரஸ் பரவலுக்கு காரணம் - மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

இவற்றுக்கும் மேல், பரிசோதனை கருவிகளின் தரமே கேள்விக் குறியாகியது. தற்போது 3 மடங்காக பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்த போதும் நோய்த் தொற்று குறைந்தபாடில்லை. நோய்த் தொற்றின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்த வேளையில் மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்தது பெரும் வேதனையாக இருந்தது. மே 10ம் தேதி கொரோனாவின் கேந்திரமாக கோயம்பேடு மார்க்கெட் மாறியது அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாகவே மாறியது.

மே 13ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மே 31க்குள் நோய் பரவல் குறைந்துவிடும் என்று எண்ணி ஜுன் 1ம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை அறிவித்தது. ஆனால் மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்த பிறகே தேர்வை நடத்த முடியாது என்பதை அரசு உணர்ந்தது. இப்படியான குழப்பமான அறிவிப்புகளை அரசு அறிவித்தது?

ஜூன் 7 அன்று, மீண்டும் பொதுத்தேர்வை நடத்தும் எண்ணத்தை தெரிவித்த அரசை எதிர்த்து தி.மு.கவும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்றமும் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு அறிவுறுத்திய பிறகு தேர்வை அரசு ரத்து செய்தது. இவ்வாறு 9 லட்சம் மாணவர்களின் உயிரை பணயம் வைத்து தேர்வை நடத்தும் முடிவை எப்படி அரசு நியாயப்படுத்தும்?

கொரோனா கொள்ளை நோய் தொடங்கிய நாள் முதலே பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தரப்பில் வெளிப்படையான தகவல்கள் கொடுப்பதில்லை. மே 28ம் தேதி கொரோனாவால் மரணித்தவர்களின் பட்டியலை ஜூன் 7ம் தேதி வெளியான செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மே 24-ஜூன் 7ம் தேதி வரை நிகழ்ந்த 7 மரணங்கள் நேற்று முன்தின செய்திக்குறிப்பில் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் மரண நிகழ்வுகளை வெளியிடுவதில் அரசு தாமதிப்பது ஏன்? மரணங்களை பற்றிய தகவல்களே இல்லாமல் அரசு எப்படி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை எடுக்கிறது? சென்னையில் சுகாதார உட்கட்டமைப்பு நொறுங்கி போயுள்ளது என்பதையே இவையனைத்தும் வெளிப்படுத்துகிறது.

நோயை கட்டுப்படுத்துவதில், தடுப்பதில் முன்கள வீரரகளாக செயல்படுவோருக்கு என அதிமுக அரசு எவ்வித ஆதரவையும் கொடுப்பதில்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவது நெருக்கடியை கையாள தெரியாத நிலையில் அரசு உள்ளது என தெளிவுபடுத்துகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 85 நாட்கள் ஆகியும் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை முறைப்படி கணக்கெடுக்கும் நடைமுறை உருவாக்கப்படாதது ஏன்?

banner

Related Stories

Related Stories