மு.க.ஸ்டாலின்

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!

அ.தி.மு.க ஆட்சியாளர்களை வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள் என குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் எழுதியுள்ள மடல் பின்வருமாறு :

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம், ஏதோ சடங்குக்காக, ‘கூடினோம்.. கலைந்தோம்’ என்று முடிவடைந்திருக்கிறது.

மாநில மக்களின் நலன்களைக் காக்கவும் உரிமைகளை மீட்கவும் ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொண்டு, அதற்கேற்ப சட்டங்களையும் திட்டங்களையும் வகுக்கவேண்டிய சட்டப்பேரவையை, ஆளுந்தரப்பினரின் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திடும் போக்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஜனவரி 6ம் நாள் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை என்பது, ஆட்சியாளர்களின் குரல் ஒலியே தவிர, அது இந்த ஆட்சியைப் பற்றிய ஆளுநரின் மதிப்பீடல்ல. ஆட்சியாளர்களின் குரல் என்பது, தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன் சார்ந்து இருந்திட வேண்டும். ஆனால், வெற்றுப் புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும் திணித்துக் கொண்ட காகிதக்கட்டாக ஆளுநர் உரை இருந்த காரணத்தால்தான், அதனைப் புறக்கணித்து தி.மு.கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தோம்.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!

ஆளுநர் என்ற பதவியின் தன்மை குறித்து அறிஞர் அண்ணா அவர்களின் காலம் தொட்டு, தி.மு.கழகத்திற்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், ஆளுநராகப் பொறுப்பு வகிக்கின்ற யார் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஒருபோதும் தி.மு.க.வுக்குக் கிடையாது. அந்தப் பதவிக்குரிய மதிப்பையும் மாண்பையும் உணர்ந்தே செயல்பட்டு வருகிறது. தற்போதைய ஆளுநர் அவர்களிடமும் அதே மதிப்பினைக் கொண்டுள்ளது. ஆளுநர் அவர்களும் அவரது உரையைத் தொடங்கியபோது, நான் எழுந்து பேச முற்பட்டதும், “மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள். நீங்கள் பேச்சுத் திறமைமிக்கவர். இப்போது நான் உரையாற்றத் தொடங்கியுள்ளேன். இது தொடர்பாக ஆளுநர் உரை மீதான விவாதம் வரும்போது நீங்கள் பேச்சுத் திறனை வெளிப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுப் பேசியதை அனைவரும் கவனித்தார்கள்.

மக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரம் தொடர்பான அத்தியாவசியப் பிரச்னைகள், மாநிலத்தின் நிதிநிலையை மோசமாக்கியுள்ள கடன்சுமை இவற்றைப் புறந்தள்ளிவிட்டு, ஆளுநர் உரையினை ஆளுந்தரப்பு தயாரித்துக் கொடுத்திருந்ததால்தான், ஜனநாயக வழியில் நம் எதிர்ப்பைப் பதிவு செய்திடும் வகையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அது குறித்து, பேரவை வளாகத்திலேயே ஊடகத்தினரிடம் விளக்கமாகத் தெரிவித்தேன்.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!

வெளிநடப்பு என்பது எதிர்ப்பைக் காட்டுவதற்கான ஓர் அடையாளம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை. அதைத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க மேற்கொண்டது. எதிர்ப்பைப் பதிவு செய்த பிறகு மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்பதுதான் கழகத்தின் மரபு. அந்த வகையில், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற ஜனவரி 7ம் நாள் பேரவையில், மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கழகத்தின் சார்பில் கொடுத்த தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தி.மு.கழகமும் தோழமைக் கட்சியினரும் வலியுறுத்தினோம். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர்கள் சிலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தனர்.

மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினராலும் கடந்த ஒரு மாத காலமாகவே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடைபெறுகின்றன.

அறவழிப் போராட்டங்களை, தடிகளைக் கொண்டும், அடக்கு முறை ஆயுதங்களைக் கொண்டும், சமூக விரோத - முகமூடி அணிந்த ரவுடிகள் கும்பலைக் கொண்டும் ஒடுக்கவும் தடுக்கவும் நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

அதனால்தான், சட்டத்தை ஆதரித்த பல கட்சிகளே, பின்னர் ஏற்பட்ட ஞானோதயத்தினால், தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இதனை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!

கேரளத்தை ஆளும் இடதுசாரி அரசு அந்த மாநிலத்தில், எதிர்க்கட்சிக் கூட்டணியையும் இணைத்துக் கொண்டு, இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றியுள்ளது.

அந்த வகையில், அ.தி.மு.க அரசும் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 2-1-2020 அன்றே சட்டப்பேரவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால், இந்தக் கோரிக்கை பேரவையில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதைக்கூட பேரவைத் தலைவர் தெரிவிக்கவில்லை.

2 நாட்கள் மட்டுமே பேரவை நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் குறித்து பேரவையில் நினைவூட்டியும் பேரவைத் தலைவர் எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், அதனை வலியுறுத்தி பேரவையில் கருத்துகளை எடுத்துரைத்தேன். ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்தார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாமல், தி.மு.கழகத்தின் மீது பழிசுமத்தும், கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன பழைய பல்லவியையே தேய்ந்த ரெகார்டு போல திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மத்திய பா.ஜ.க அரசின் பாதம் தாங்கிகளாக இருக்கும் மாநில அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றும் எண்ணமோ தெம்போ துணிவோ சிறிதும் இல்லை என்பதை உணர்ந்து பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தோம்.

அதேநாளில் கழகத்தின் சார்பில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், எம்.ராமச்சந்திரன், உ.மதிவாணன், கு.பிச்சாண்டி ஆகியோர் பேரவையில் உரையாற்றினார்கள்.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!
Admin

ஜெ.அன்பழகன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகளையும், அதையும் மீறி கழகம் வெற்றி பெற்றிருப்பதையும் எடுத்துரைத்த போது, தி.மு.க.வின் வெற்றியினால் மனம்புழுங்கிக் கிடக்கும் ஆளுந்தரப்பினர், தவறான புள்ளிவிவரங்களையும், தேவையற்ற கருத்துகளையும் தெரிவித்த காரணத்தினால், ஜெ.அன்பழகன் உணர்ச்சிவசத்துடன் உண்மைகளை எடுத்துக்கூறினார்.

அப்போது அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமைச்சரைப் புண்படுத்தியதாகவும், அவை மரபுகளை மீறியதாகவும் பேரவைத் தலைவர் குறிப்பிட்டபோது, நான் அதற்காக வருத்தம் தெரிவித்தேன். இது தி.மு.கழகத்தின் நாகரிகம். ஆனால், ஜெ.அன்பழகன் பயன்படுத்தியது போன்ற வார்த்தைகளை அமைச்சரும் பயன்படுத்தினார். அதற்கு பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு!

ஜெ.அன்பழகன் தொடர்ந்து பேசும்போது ஆளுந்தரப்பினர் குறுக்கிட்டனர். அவரை வெளியேற்ற வேண்டும் என, அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.

குறிப்பாக, “நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வின் 11 வாக்குகள் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக விழுந்திராவிட்டால், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறியும் இருக்காது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்திருக்காது” என்று ஜெ.அன்பழகன் குறிப்பட்டுச் சொன்னபோது, அந்த உண்மையை ஆளுந்தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“ஜெ.அன்பழகன் எப்போது பேசினாலும் அவையில் பிரச்சினை ஏற்படுகிறது” என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். உண்மைகள் எப்போதும் அவர்களுக்குப் பிரச்னைகள்தானே! எனவே அவைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி, கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ. அன்பழகனுக்குத் தடைவிதித்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!

எதிர்க்கட்சி என்பது ஆளுந்தரப்பின் போக்குகளைச் சுட்டிக்காட்டும் பொறுப்பில் உள்ளது. அ.தி.மு.க ஆட்சியாளர்களோ, தங்கள் அரசு பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கத் தெரியாமலும் தெளிவில்லாமலும், தி.மு.க ஆட்சிக்காலம் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதிலும்கூட உண்மையான விவரங்களைச் சொல்லமுடியாமல், வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியுமே வெளிப்பட்டது.

தங்கள் பக்கத்தில் சொல்வதற்கு நியாயமும் இல்லாமல், எதிர்க்கட்சி மீது உண்மையான விமர்சனமும் வைக்க முடியாமல், இடறித் தடுமாறும் பரிதாபம்தான் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருந்தது.

ஜனவரி 8ம் நாள், ஆளுநர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய கருத்துகளை எடுத்து வைத்து உரையாற்றினேன். “அரசைப் புகழ்ந்துள்ள இந்த உரை ஆளுநர் உரை அல்ல. அரசின் அச்ச உரை” என்பதை, அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினேன். Review note என்கிற ஆய்வுக் குறிப்பாக உள்ள ஆளுநர் உரையில், அரசின் கொள்கையோ கோட்பாடோ எதுவும் சொல்லப்படவில்லை. நாட்டையே உலுக்குகின்ற மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்பதையும் எடுத்துக்காட்டி, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதன் நடைமுறைச் சாத்தியக்கூறுகளின் உண்மைத்தன்மை பற்றியும் எடுத்துரைத்தேன்.

“இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 21 என்ன சொல்கிறது என்று சொன்னால், “A person who is a citizen of SriLanka by registration shall cease to be a citizen of SriLanka if he voluntarily becomes a citizen of any other country” என்கிறது. “இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள், இலங்கையின் குடிமக்களாக இருக்க முடியாது” என்று அந்நாட்டு குடியுரிமைச்சட்டம் கூறுகிற நிலையில், இரட்டைக் குடியுரிமை சாத்தியம் இல்லை என்பதையும் எடுத்துரைத்தேன்.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!

இலங்கையின் தற்போதைய அதிபரான கோத்தபய ராஜபக்சே, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் எனக்கூறி, அதிபர் தேர்தல் நேரத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இதுதான் அங்குள்ள நிலைமை. சட்டத்தின் பிடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு அதிபராகியுள்ள கோத்தபய ராஜபக்சே, இப்போதும் ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளை மறுக்கிறார். தமிழில், இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடுவதற்கும் தடை விதித்துள்ளது அவரது அரசு.

அப்படிப்பட்டவர்களின் ஆட்சியில் இந்திய அரசும் இலங்கை அரசும் இரட்டைக் குடியுரிமைக்கான ஒப்பந்தம் போட்டுக் கொள்ள முடியும் என அ.தி.மு.க அமைச்சர்கள் நம்புவார்களேயானால், அவர்களின் நிலை கண்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. எருக்கஞ் செடியில் மல்லிகை பூக்குமா?

இந்திய இறையாண்மைக்குட்பட்ட தமிழக அரசு, நம் நாட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்கான குடியுரிமைக்காகக் குரல் கொடுக்கத் துணிவின்றி இருக்கிறார்கள்; திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்; என்பதையே அமைச்சர்களின் வாய்ஜாலங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை, ஆகவேண்டிய பணிகளைச் செய்யாமல், போகாத ஊருக்கு இல்லாத வழிகாட்டுவது போல, வெற்றுப் பேச்சுகளும் வெறும் புகழுரைகளும் மட்டுமே ஆளுநர் உரையிலும், அதன் மீதான ஆளுந்தரப்பினரின் உரைகளிலும் அமைந்திருந்தது.

‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில், அது குறித்த சட்டமன்றத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதையும் மறந்துவிட்டு, பொய்யான வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு வழங்கியதால்தான், அரியலூர் அனிதா தொடங்கி 7 மாணவச்செல்வங்களின் உயிர்களைப் பறிகொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இப்போது புண்ணுக்குப் புணுகு தடவும் கதையாக, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தின் வழக்கு என, புதிய நாடகம் போடப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசினேன்.

“வெற்றுப் புகழுரையில் மகிழும் வேடிக்கை மனிதர்கள்” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து மு.க.ஸ்டாலின் மடல்!

தங்கள் தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்ளும் மனசாட்சியும் நேர்மையுமற்ற அ.தி.மு.க அரசு, இதற்கும் வழக்கம்போல தி.மு.க. மீது குற்றம்சுமத்தி தப்பிக்க நினைத்தது.

தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தவரை ‘நீட்’ தேர்வுக்கு இங்கே இடமில்லை. அதன்பிறகு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலும் ‘நீட்’ இல்லை. தற்போதைய அ.தி.மு.க. அரசின் சுயநல அடிப்படையிலான அடிமைத்தனமே ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கிடைக்காத நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது.

இதை நான் மட்டுமல்ல, எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன் அவர்களும் விளக்கமாக எடுத்துரைத்தால், முதலமைச்சர் கோபப்படுகிறார். யாரும் தங்களுக்கு உத்தரவிடமுடியாது என்கிறார். டெல்லி உத்தரவுகளுக்கேற்ப தோகை விரித்து ஆடும் அரசாங்கத்திடம், வேறு யார் உத்தரவிட முடியும்? மக்களின் நிலையை யார் எடுத்துச் சொல்ல முடியும்?

கற்பனை உலகில் சஞ்சரித்தபடி, “தமிழ்நாடுதான் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக இருக்கிறது” என்று, தங்கள் முதுகில் தாங்களே தட்டிக்கொண்டு ‘சபாஷ் ‘ போடுகிற ஆட்சியாளர்களுக்கு, உண்மை நிலவரம் என்ன என்பதை எடுத்துரைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கிறது என்பதால், என்னுடைய உரையில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குறைந்திருப்பதையும், தொழில் வாய்ப்புகள் மங்கிவிட்டதையும், மாநில ஆட்சியாளர்கள் மார் தட்டிக்கொள்ளும் மத்திய அரசின் ஆய்வறிக்கை அடிப்படையிலேயே சுட்டிக்காட்டினேன்.

“வணிகம் மற்றும் தொழிற்சாலைப் பிரிவில் 14வது இடம். விவசாயத்தில் 9வது இடம், சமூக நலத்துறையில் 7வது இடம், பொருளாதார மேலாண்மையில் 5வது இடம். சட்டம் ஒழுங்கு நிலைமையும் மெச்சத்தகுந்ததாக இல்லை. இந்த அரசு தாக்கல் செய்த காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பின் அடிப்படையில், கடந்த 3 வருடங்களில் கொலைகள் 4,465. கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7,534. இதை தவிர நடைபெற்ற குற்றங்கள் 5,44,636 எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதுமட்டுமின்றி பொள்ளாச்சியில் 250 பெண்களுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டனர். “பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் தமிழகம் இரண்டாவது இடம்” என்பதைச் சுட்டிக்காட்டியபோது, குறுக்கீடுகளும் கூச்சல்களும்தான் ஆளுந்தரப்பிலிருந்து வெளிப்பட்டதேயன்றி, உண்மைகளை நேரடியாகச் சந்திக்கும் உரிய பதில்களோ புள்ளிவிவரங்களோ வெளிப்படவில்லை. எப்படி வெளிப்படும்?

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய ஜனவரி 9ஆம் நாளன்று, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இது என்று காவல்துறை சொல்கிறது. துப்பாக்கியால் சுடப்பட்டதுடன், அந்தக் காவல் அதிகாரி உடலில் கத்திக்குத்துகளும் பதிந்துள்ளதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. “காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை!” என்பதில்தான் தமிழ்நாடு முதலிடம் என்பதையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்வாரா?

அதனால்தான் ஆளுநர் உரை என்பது மாநிலத்தின் உண்மை நிலைமையை எடுத்துச் சொல்லாமல், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளைக் குறிப்பிடாமல், வெற்றுப் புகழுரைகளால் நிறைந்திருக்கிறது என்பதைத் தொடக்க நாள்முதலே எடுத்துரைத்து வெளிநடப்புச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம். கூட்டத்தொடரின் இறுதிநாளில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வேடிக்கை மனிதர்களான ஆளுந்தரப்பினரின் இத்தகைய வினோதப் போக்குகளுக்கு நடுவில், பேரவையின் கேள்வி நேரங்களில் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து சிறப்பாக உரையாற்றினார்கள்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.கழகம் தன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அது ஆளுங்கட்சியாக வேண்டும் என்கிற மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றிட, இன்றைய ஆட்சியாளர்களே ஒத்துழைப்பது போல அமைந்திருக்கிறது; ஆளுநர் உரையும், அதன் மீதான ஆளுந்தரப்பின் உரைகளும்!”

இவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories