சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது.
அவற்றில் இருந்து பேனர் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. அதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
பேனர் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் எச்சரித்தும் ஆளும் கட்சியினர் இத்தகைய செயலை தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களின் செயலால் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ''அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல். அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது'' என தெரிவித்துள்ளார்.