மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது. மாநிலத்தை இயல்புநிலைக்கு கொண்டுவராமல் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சைராவன் கிராமத்துக்குள் இரவு புகுந்த ஆயுத கும்பல் ஒன்று பெண் ஒருவரை பாலியல் வன்முறை செய்து, அவரை கொலை செய்துள்ளது.
மேலும் அந்த பெண்ணின் வீடு உள்பட 17 வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளது. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் உடலும் எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் கருகிய உடல் அசாமிலுள்ள சில்சார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.