கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஹரீஷ் என்ற இளைஞர். இவர் சம்பவத்தன்று பெங்களூரு மாநகரப் பேருந்தில், வைட்ஃபீல்டில் இருந்து நகரின் மையப் பகுதிக்கு பயணம் செய்தார். இந்த சூழலில் இவர் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளார். ஹரீஷ் படிக்கட்டில் நிற்பதை கண்ட நடத்துநர், அவரை உள்ளே வரும்படி கூறியுள்ளார்.
ஆனால் நடத்துநர் கூறியதையும் பொருட்படுத்தாமல், அவர் படிக்கட்டில் நின்று கொண்டே இருந்துள்ளார். இதனால் நடத்துநர் மற்றும் இளைஞர் ஹரீஷ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாத்தில் அதீத கோபடைந்த இளைஞர் ஹரீஷ், தனது ஆடையில் இருந்த பையில் இருந்து கத்தியை எடுத்து நடத்துநரை குத்தியுள்ளார்.
நடத்துநரை கத்தியால் இளைஞர் குத்தியதை கண்ட சக பயணிகள் அலறவே, அவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயணிகள் முண்டியடித்து தப்பிக்க முயன்றபோது, பேருந்தின் முன்பக்க கதவு திறக்கப்படாத நிலையில், ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறக்கப்பட்டு, மக்கள் மிகவும் சிரமப்பட்டு வெளியேறினர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருந்த குற்றவாளி ஹரீஷை கைது செய்தனர். மேலும் நடத்துநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளி ஹரீஷிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள டெலி பெர்ஃபார்மன்ஸ் என்ற BPO நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தினமும் வேலை தேடி வந்ததாகவும், வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார். மேலும் பல வாரங்களாக உணவுக்காக போராடிய போது, குற்றம் செய்து சிறைக்கு சென்றால் 3 வேளை சாப்பாடு கிடைக்கும் என முடிவு குற்றத்தை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இளைஞரின் இந்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 வேளை சாப்பாட்டுக்காக ஒரு இளைஞர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசுக்கு பெரும் இழுக்கு என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.