பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் அரசினாலேயே, அப்பாவி சிறுபான்மையினர்களின் வீடுகள் இடிக்கப்படும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
எட்டிப்பார்த்தார், எச்சில் துப்பினார், எதிர்த்து பேசினார் என்ற காரணங்களுக்காக வீடுகள் இடிக்கப்படும் விவகாரம், கடந்த 3 ஆண்டுகளில் உச்சம் தொட்டுள்ளன.
இந்நிலையில், புல்டோசர் இடிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “புல்டோசர் இடிப்பு நாள்தோறும் தொடர்கிறது. ஒரு மத ஊர்வலம் நடந்தால் அங்கு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகிறது. மறுநாள் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன” என தெரிவித்தார்.
அதற்கு ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மட்டுமே நோட்டீஸ் அனுப்பி இடிக்கப்படிகின்றன” என பதிலளித்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு உடனடியாக இடிப்பதை ஏற்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகளை, கட்டடங்களை மட்டும் குறிவைத்து புல்டோசர் மூலம் இடிப்பது என்பது அரசியல் அமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது” என கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், “நாடு முழுவதும் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் நெறிமுறைகள் உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்படும். அதுவரை, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த கட்டடங்களையும் இடிக்கக்கூடாது” என்று உத்தரவிட்டனர்.