ஒன்றியத்தில் முதலாளித்துவ கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருவது, ஒன்றிய பட்ஜெட், ஒன்றிய பா.ஜ.க அரசின் திட்டங்கள், தனிநபருக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வு, கார்ப்பரேட் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு, முதலாளிகளின் பல்லாயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு குறைந்த ஆதரவு விலை வழங்காமை, இயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கும், மக்களுக்கும் நிதி ஒதுக்காமை உள்ளிட்ட பல நிகழ்வுகளால் உறுதிபட்டு வருகிறது.
இந்நிலையில், வறுமையில் ஆட்பட்டிருக்கிற மக்களும், குறிப்பாக நடுத்தர மக்களும், தங்களது உடல்நலத்தை பேணுவதற்காக, சிறுக சிறுக சேமித்து கட்டும், மருத்துவ காப்பீட்டு கட்டணத்திலும், ஒன்றிய பா.ஜ.க அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பு செய்திருப்பது கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
இது குறித்து ஒன்றிய பா.ஜ.க அரசே, கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ காப்பீட்டிற்கு விதிக்கப்படுகிற ஜி.எஸ்.டி.யின் வழி ரூ. 24,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் ஒப்புகொண்டுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையில், இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஒருமித்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு, சரத் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், இது குறித்து ராகுல் காந்தி, தனது X தளப்பக்கத்தில், “உயிர் காப்பீட்டு திட்டத்திற்கு விதிக்கப்படுகிற வரியின் வழி, இதுவரை சுமார் ரூ. 24 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. மக்கள் சிறுக சிறுக சேமித்து கட்டிய காப்பீட்டில் வரி பரிப்பு என்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதனை இந்தியா கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. உயிர் காப்பீட்டில் GST வரி விலக்கை முன்மொழிகிறது” என்ற கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
“24 மணிநேரமும் தனது முதலாளி நண்பர்களுக்கு உதவுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் மோடிக்கு, மக்களின் உடல்நலம் குறித்து கவலையில்லை என்பது, மருத்துவ காப்பீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வழி வெளிப்பட்டுள்ளது” என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.