18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். இதைத்தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று மக்களவையில் மோடி பேசிய நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசி வருகிறார். இந்த சூழலில் தற்போது மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவையில் குடியரசுத்தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் மோடி உரையின்போது, அரசியல் சாசனம் குறித்து பேசினார்.
அரசியல் சாசனம் குறித்து போலியான தகவலை பேசியுள்ளார் மோடி. தொடர்ந்து அரசியல் சாசனம் குறித்து பேசி வந்த மோடிக்கு, எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அரசியல் சாசனம் குறித்தும், தேர்தல் குறித்தும், தேர்தல் முடிவு குறித்தும் மோடி கூறியது உண்மைக்கு புறம்பான தகவல் என்றும், இதுகுறித்து விளக்குவதற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்குமாறும் எதிர்க்கட்சிகள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் வழக்கம்போல் மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தன்கர் எதிர்க்கட்சிகளின் பேச்சை காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் மோடியின் உரைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்படியிருந்தும் மோடி, தனது பேச்சை தொடர்ந்து வந்தார். இதனால் மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.