தமிழ்நாடு

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள்: சொல்லிலும் செயலிலும் நிலை நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிலை நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள்: சொல்லிலும் செயலிலும் நிலை நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவையாகும். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உட்பிரிவுகளுடன் உள்ளன. இந்த விதிகளில் தனிச் சிறப்பு வாய்ந்த பேரவை விதி எண்.110.

பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால் அதை, பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நலனில் தனி முக்கியத்துவமும், தனி கவனமும் செலுத்தி வருபவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கடந்த 20.6.2024 முதல் 29.6.2024 வரை ஒன்பது நாள்கள் காலை, மாலை இரு வேளையும் தமிழ்நாடு சட்டப் பேரவை கூடி, மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று ஒவ்வொரு துறை சார்ந்தும் முக்கிய பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்தப் பேரவை தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் பயன்கள் தந்திடும் சில முக்கிய அறிவிப்புகளைச் சட்டப் பேரவைவிதி 110 மூலம் வெளியிட்டு வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்கள்.

கிராமப்புறச் சாலைகள் மேம்பாடு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 24.6.2024 அன்று கிராமப்புறச் சாலைகள் திட்டம் குறித்து சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அதில், “கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, வறுமையை ஒழிப்பதில் முக்கியக் காரணியாக உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 1 இலட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளன. 13-1-2023 அன்று என்னால் சட்டப் பேரவையில் "முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன” என்றும்,“கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு 9 ஆயிரத்து 324 கோடியே 49 இலட்சம் ரூபாய். இதனைத் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற இரண்டு ஆண்டுகளில் "முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்” மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்” - என்றும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு கிராமங்களின் வளர்ச்சியில் திராவிடமாடல் அரசின் அக்கறையை வெளிப் படுத்தினார்கள்.

75000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

அதே போல, 25.6.2024 அன்று, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110-ன்கீழ் பேரவையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

“இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்துத் திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை!

வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவைதான் “புதுமைப்பெண்”, “தமிழ்ப் புதல்வன்”, “நான் முதல்வன்” போன்ற திட்டங்கள். கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாகவும், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாகவும் மொத்தம் 65 ஆயிரத்து483 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 3 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக்கூடிய, "நான் முதல்வன் திட்டம்” மூலமாகச் சிறப்புப் பயிற்சிகள் தரப்பட்டு; இதுவரை, 3 இலட்சத்து 6 ஆயிரத்து 459 இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 இலட்சத்து ஓர் ஆயிரத்து

596 இளைஞர்களுக்கும் மொத்தம் 5 இலட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

'நம் இளைஞர்கள்தான் நம் பலம் ! அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!' இதனை உணர்ந்த காரணத்தினால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும். அதாவது வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

இவற்றை மொத்தமாகச் சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்”. - என்று முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களுக்கு இன்பம் தரும் அரசு வேலைகள் குறித்த செய்தியை வெளியிட்டார்கள்.

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள்: சொல்லிலும் செயலிலும் நிலை நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஓசூரில் 2000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்

27.6.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,“2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 'நம்பர்-1' மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருள்கள், மின்னணுப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. புத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020 ஆம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் 'ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஒசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், ஒசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்” என்றும் ;

திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்

“திராவிட இயக்கம் என்பது மாபெரும் அறிவியக்கம். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைமை நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் 'அறிவகம்' என்று பெயர் சூட்டினார். தற்போதைய தலைமை நிலையத்துக்கு 'அறிவாலயம்' என்று பெயர் சூட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தி.மு.கழகம் எங்கெல்லாம் கிளை பரப்பியதோ, அங்கெல்லாம் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டன.

அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய இயக்கமாகவும் வளர்ந்தது. வாசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் வேறுபாடு காணமுடியாத வாழ்க்கை வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பாதி வரை படித்த புத்தகங்களின் மீதியைப் படிப்பதற்கு ஏதுவாக அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த பேரறிஞரின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழ்ந்த தலைவர் கலைஞர், கோட்டூர்புரத்தில் எட்டு மாடிகள் கொண்ட, ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கிற வகையில், மூன்று இலட்சத்து முப்பத்து மூன்றாயிரம் சதுர அடிகள் கொண்ட நூலகத்தை உருவாக்கி, அதற்கு 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.

அந்த வகையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சங்கம் வைத்து மாத்தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர்வாழ் பொது மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அந்த வரிசையில், காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும்”- என்றும் இரண்டு மகத்தான அறிவிப்புகளைப் பெருமிதத்துடன் வெளியிட்டார்கள்.

சிதிலமடைந்த வீடுகள் மறுகட்டுமானம்

28.6.2024 அன்று, சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வது குறித்து, ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்கள். அப்போது, “இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இதுவரை 29 ஆயிரத்து 439 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 1 இலட்சத்து 70 ஆயிரத்து 462 தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 172 திட்டப் பகுதிகளில் 79 ஆயிரத்து 94 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 89 ஆயிரத்து 429 தனி வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளுக்காக 6 ஆயிரத்து 685 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது”- என்றும்;

“தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், 28 ஆயிரத்து

643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும்.

இதன் முதற்கட்டமாக, 2024-2025 ஆம் ஆண்டில், சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் திட்டப்பகுதி மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள

6 ஆயிரத்து 746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஆயிரத்து 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்றும் அறிவித்துள்ளார்கள்.

மொத்தத்தில்

​450 கோடி மதிப்பீட்டில் 10,000 கிலோ மீட்டர் நீள கிராமச் சாலைகள் மேம்பாடு; 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்; ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்; திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக சேதாரம் அடைந்துள்ள 6746 அடுக்குமாடி குடியிருப்புகளை 1149 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்புகளுக்கும் வழிவகை செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110 அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் என்றும், எப்பொழுதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories