மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இவர் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறு கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவராக அறியப்பட்டவர். இவர் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த மே 2ஆம் தேதி, ஆளுநர் தனக்கு பாலியல் புகார் அளித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனக்கு ஆளுநர் மாளிகையில் நிரந்தர பணி தருவதாக கூறி, தன்னை தனி அறையில் வைத்து பாலியல் சீண்டல் செய்ததாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவம் குறித்து ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
ஏனெனில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 361, ஆளுநர் பதவியிலிருக்கும் ஒருவரை அவருக்கெதிரான குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கி வைப்பதால் சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆளுநரின் உறவினர் மீது நடனக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த நடனக்கலைஞர் ஒருவர், தனக்கு வெளிநாடு செல்வதில் சிக்கல் இருந்ததால் அதனை நீக்க உதவி கோரி மேற்குவங்க ஆளுநரை, ஆளுநர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளார். அப்போது அவரது பிரச்னைக்கு தீர்வு காண உதவுவதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பி அவரும் சென்றுள்ளார்.
பின்னர் டெல்லி தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அந்த கலைஞருக்கு, கடந்த ஜனவரி 5, 6 தேதிகளில் ஆளுநரின் உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நடனக்கலைஞர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கொல்கத்தா போலீஸ் ஆளுநர் உறவினர் மீது பாலியல் வன்முறை, மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் குற்றம் டெல்லியில் நடந்ததால், வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றி முதன்மை மெட்ரோ போலிட்டன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் இருக்கும் நிலையில், தற்போது அவரது உறவினர் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.