உலக அளவில், கணிப்புகள் ரீதியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஆகவே, தனிமனித வருமானம் உயர்ந்தாலோ, தாழ்ந்தாலோ, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி தவிர்க்கமுடியாததாய் அமைந்துள்ளது.
அவ்வாறு, இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாலும், இந்தியா பல நிலைகளில் பின்னோக்கியே சென்று வருகிறது.
அதற்கு, பன்னாட்டு அமைப்புகளாலும், ஐ.நா.வினாலும், ஆண்டிற்கு ஒருமுறை வெளியிடப்படும் குறியீடுகளே சான்றுகளாகவும் அமைந்துள்ளன.
அவ்வாறு சான்றுகளாக இருக்கும் உலக பட்டினி குறியீடு, உலக மகிழ்ச்சி அறிக்கை உள்ளிட்ட அனைத்து பட்டியல்களிலும், இந்தியாவின் நிலை மட்டும், தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருக்கிறது.
2022ஆம் ஆண்டிற்கான, உலக பட்டினி குறியீடு பட்டியலில், 107ஆவது இடம் வகித்த இந்தியா, 2023ஆம் ஆண்டு 111ஆவது இடத்திற்கு பின்வாங்கியது.
அதே நிலை தான், உலக மகிழ்ச்சி அறிக்கையிலும். இந்நிலையில், தற்போது இந்தியாவின் கவலைக்குரிய நிலையை கூடுதலாக விளக்கியிருக்கிறது பாலின இடைவெளி அறிக்கை.
உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின் 18ஆவது பதிப்பில், 129ஆவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா.
இது, பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு; கல்வி அடைதல்; ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வு; அரசியல் அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், பாலினங்களுக்கு இடையிலான இடைவெளியை வைத்து பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இதனால், இந்தியாவில் தனிமனித பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, தற்கொலைகள் மட்டும் உயரவில்லை, பாலின சமத்துவமின்மையும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது வெளிப்பட்டிருக்கிறது.
இந்தியாவை விட பாலின சமத்துவம் அதிகமுள்ள அண்டை நாடுகளாக வங்காளதேசம் (99), நேபாளம் (111) மற்றும் இலங்கை (125) ஆகியவை விளங்குகின்றன.