நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கும் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூன் 30-ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 63 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இவர்களில் 23 பேர் பல்வேறு ஆண்டுகளுக்கும், 12 பேர் மூன்று ஆண்டுகளுக்கும், 9 பேர் இரண்டு ஆண்டுகளுக்கும், 2 பேர் ஒரு ஆண்டுக்கும் தேர்வு எழுத முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நீட் முறைகேட்டில் ஒன்றிய பாஜக அரசின் கையாலாகாத்தனம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.
மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.
ஒன்றிய அரசின் திறமையின்மையையும், இலட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.