மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 63 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இவர்களில் 23 பேர் பல்வேறு ஆண்டுகளுக்கும், 12 பேர் மூன்று ஆண்டுகளுக்கும், 9 பேர் இரண்டு ஆண்டுகளுக்கும், 2 பேர் ஒரு ஆண்டுக்கும் தேர்வு எழுத முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கும் மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
அப்போது கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், 1,563 பேருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களது அசல் மதிப்பெண் விவரம் வெளியிடப்படும் என்றும், அந்த முடிவுடன் கலந்தாய்வில் பழைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் பங்கேற்பது அல்லது மறுதேர்வை எதிர்கொள்வது குறித்த முடிவை தேர்வர்கள் எடுக்கலாம் என தெரிவித்தனர்.