கொரோனா பெருந்தொற்று பரவலைதடுக்க 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, PM Cares என்ற நிதியத்தை அறிவித்தார். அரசுக்கு சொந்தமில்லாத, ஆர்.டி.ஐ வரம்புக்கும் வராத PM Cares நிதிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள் நன்கொடைகள் அளித்துள்ளனர்.
PM Cares நிதி உருவாகி 4 ஆண்டுகளாகியும், அதில் அளிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி பணம் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
PM Cares நிதியத்துக்கு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வந்ததாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ள அவர், உண்மையில் எவ்வளவு நிதி வந்தது, யாரிடம் இருந்து வந்தது? எப்போது, எப்படி வந்தது? என்ற கேள்விகளுக்கு ஒன்றிய அரசிடம் பதிலில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் எப்படி பாஜக ஊழல் செய்ததோ, நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்ததோ, நன்கொடை அளித்த நிறுவனங்கள் எப்படி ஆதாயம் பெற்றதோ, அதேபோலத்தான், பி.எம். கேர்ஸ் நிதியிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி, அவர் விரும்பியபடி, நன்கொடை பணத்தை செலவழிக்க, வெளிப்படை இல்லாத இதுபோன்ற நிதி அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்குகிறாரா? என்ற சந்தேகம் எழுவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.