ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் அதன் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க ரூ.6060 கோடி நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும் முழு தகவலையும் மார்ச் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் SBI வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க மிகப்பெரிய ஊழல் செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் காலாவதியான தேர்தல் நன்கொடை பாத்திரங்களைப் பணமாக்க நிதி அமைச்சகம் பாஜகவுக்கு உதவியது தற்போது அம்பலமாகியுள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திரம் வாங்கிய தேதியிலிருந்து 15 நாட்களில் அரசியல் கட்சிகள் அதனை வங்கியில் செலுத்தி பணமாக்கிக் கொள்ள வேண்டும். 15 நாட்கள் தாண்டினால் அந்த தேர்தல் பத்திரம் செல்லாதது ஆகிவிடும். அந்த பணத்தை பாரத ஸ்டேட் வங்கி பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் இந்த விதிமுறையைத் தளர்த்தி பா.ஜ.க தேர்தல் நன்கொடை பத்திரங்களைப் பணமாக்க நிதி அமைச்சகம் உதவி செய்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. பெங்களூருவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 20 தேர்தல் பத்திரங்கள் 2018 ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி வாங்கப்பட்டுள்ளன.
இதில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் 15 நாள் காலாவதி தாண்டி டெல்லியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 2018 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி பணமாக்கப் பட்டுள்ளது. இதற்காகப் பாரத ஸ்டேட் வங்கியின் டெல்லி கிளை, மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகம், ஒன்றிய நிதி அமைச்சகம் மூன்றும் 24 மணி நேரத்தில் கடிதப் போக்குவரத்து நடத்திச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி,15 நாள் காலாவதி என்பதை 15 வேலை நாட்கள் என்று இந்த ஒரு முறை மட்டும் கருதி இந்த பத்திரங்களைப் பணமாக்க அனுமதிக்கலாம் என்று நிதி அமைச்சகம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. இந்த விவரங்களை தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்ல 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போதும், 2022 டிசம்பர் மாதம் குஜராத் தேர்தலின் போதும் கூடுதலாக 10 நாட்கள் தேர்தல் பத்திர விற்பனைக்கு அனுமதி வழங்கி இருப்பதையும் இந்த அமைப்பு வெளிப்படுத்தி உள்ளது.