நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்து நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் வெற்றிகரமான நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ அமைப்பு சூரியனை ஆய்வு செய்ய குறிவைத்து ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
அந்த விண்கலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி எல்-1 எனும் சுற்றுப் பாதையில் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை ஆதித்யா விண்கலம் முழுமையாக கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் , சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை ஆதித்யா முழுமையாக கண்டறிந்துள்ளது. விண்கலத்தில் பொருத்தப்பட்ட PAPA எனும் கருவி சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை முழுமையாக கண்டறிந்துள்ளது.
ஆதித்யா விண்கலம் லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் தொடர்ந்து சூரியனின் எலக்ட்ரான் மற்றும் அயனிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விண்வெளி வானிலை நிலைகளைக் கண்காணிப்பதில் PAPA கருவி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.