ஜி.டி.பி. என்பது, ஒரு நாட்டில், ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பொருட்களின், பணிகளின் ரூபாய் மதிப்பு. இதில் உள்ளீட்டுப் பொருட்கள், இடைநிலைப் பொருட்களின் மதிப்பு சேர்க்கப்படுவதில்லை. ஏனெனில், அந்த மதிப்புகெல்லாம் இறுதிப் பொருளின் மதிப்பில் உள்ளடக்கம்தான்.
உற்பத்தியை ரூபாய் மதிப்பில் பெற நாம் சந்தை விலையைப் பயன்படுத்த வேண்டும். இதில் நிலையான விலை, தற்போதைய விலை என்ற இரண்டு முறைகள் உள்ளன. ஒரு பொருளின் விலை பணவீக்கத்தால் அதிகரிக்கும் என்பதால், ஓர் அடிப்படை ஆண்டைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆண்டில் நிலவிய விலையில் ஜி.டி.பி. மதிப்பிடப்பட்டால் அது ‘நிலையான விலை’ எனப்படும்.
அதற்குப் பதில் தற்போதைய விலையில் ஜி.டி.பி. மதிப்பிடப்பட்டால் அது ‘தற்கால விலை’ என்றும் கூறப்படும். ஒரு நாட்டின் உண்மை வளர்ச்சியை அறிய நிலையான விலையில்தான் ஜி.டி.பி. மதிப்பிடப்பட வேண்டும். அந்த வகையில், ஜி.டி.பி என்பது அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் வாங்கும் திறனை கணிக்க கூடிய மிக முக்கியமான அம்சம்.
இந்தியாவை பொறுத்த வரையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5ஆவது இடம். ஆனால், தனி நபர் GDPயில் 129 ஆவது இடம். இந்திய பொருளாதாரத்திற்கும், இந்திய மக்களின் பொருளாதாரத்திற்குமான இடைவெளி நீண்டு கொண்டே போகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த தரவுகள்.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும், அதன் அமைச்சர்களும் ஒவ்வொரு மேடைகளிலும் அவர்களின் சாதனையாக முதலில் கூறுவது “இந்தியா 5 ஆவது பொருளாதார நாடாக முன்னேறிவிட்டது. உலகின் வேகமாக வளர்ச்சியடையும் நாடு இந்தியா!” என்று சொல்லி தான் மற்றவர்களுக்கு வணக்கமே கூறுவார்கள்.
அடை மழையில் அரிதாரங்கள் கலைந்து தான் போகும் என்பதற்கேற்ப இவர்களின் அரிதாரங்களையும் அளித்திருக்கிறது IMF நிறுவனம் வழங்கிய இந்த ஆதாரங்கள்.
சர்வதேச நாணய நிதியம் (IMF), தனிநபர் GDP அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தனி நபர் GDP என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அங்கு வாழும் அதன் மக்கள் தொகையுடன் ஒப்பீட்டு கணக்கிடும் முறையாகும். அதன் படி, லக்ஸம்பெர்க் நாடு, உலகின் பணக்கார நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பொருளாதார நாடாக விளங்கும், அமெரிக்கா இப்பட்டியலில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா, தனி நபர் GDP என்று வருகிற நிலையில், 129 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சராசரி குடிமக்களின் வருமானம், சொத்து மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடுகையில், இந்தியாவின் பொருளாதார நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் பீகார், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களின் தனி நபர் GDP மதிப்பு, தேசிய அளவில் குறைவான மதிப்பை பெற்றுள்ளது.