சமீப சில ஆண்டுகளில் Artificial Inteligence தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது.
அதோடு ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற "காவலா.." பாடலுக்கு காஜல், சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுவது போல் AI-ஐ பயன்படுத்தி வீடியோக்களும் வெளியானது. இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் கண்டு ரசித்தாலும், மற்ற சிலர் அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.
அதோடு சில நாட்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகாவின் AI வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வேறு ஒரு பெண்ணின் முகத்தில் ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி அவர் பிகினி ஆடையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் AI வீடியோக்கள் குறித்து புகார் வந்தால் 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " AI தொழில்நுட்பத்தின் Deep fake வீடியோவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க நவம்பர் 24-ம் தேதி மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இதில், இந்தியாவில் செயல்படும் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற ஆன்லைன் தளங்களின் நிர்வாக உறுப்பினர்களும் பங்கேற்கும் நிலையில், அவர்களிடம் Deep Fake தொழில்நுட்பம் மக்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதை கூறுவோம். அத்தகைய வீடியோகள் குறித்து புகார் வந்தால் 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயம் செய்யவிருக்கிறோம்.
கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் பதிவை நீக்கம் செய்யவில்லை என்றால், அந்த நிறுவனத்துக்கு தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட `பாதுகாப்பான இணையதளம்' என்ற அந்தஸ்து திரும்பப் பெறப்படும். இந்த அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டால், `இணையத்தில் வெளிவரும் போலியான தகவல்களுக்கு, இணையதள நிர்வாகம் பொறுப்பல்ல. அவற்றைப் பதிவிடும் பயனரே முழுப் பொறுப்பு' என்ற சட்டம் சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குச் செல்லுபடியாகாது. எனவே, பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்துக்குச் சென்று இணையதள நிர்வாகத்தின்மீது இந்திய தண்டனைச் சட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின்கீழ் கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.