உலகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று தான் கொரோனா. இந்த பெருந்தொற்றின் காரணமாக நாள்தோறும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது. தினமும் உலகம் முழுவது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நோய் தொற்று பரவ கூடாது என்பதால் அந்தந்த நாட்டு அரசு அதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால் லாக் டவுன் போடப்பட்டு மக்கள் பலரும் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மாஸ்க் அணிவது, சுத்தமாக இருப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டறிந்து, அதனை மக்கள் செலுத்திய பின்னரே, கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்தது. எனினும் சிலர் உயிரிழந்தே வந்தனர்.
தொடர்ந்து பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது இந்த நோய் தொற்று இல்லாமல் காணப்படுகிறது. எனினும் கொரோனா தடுப்பூசி போட்ட சில மாதங்கள் கழித்து இந்தியாவில் இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வயதானவர்களுக்கு வரும் இந்த மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் தற்போது சிறுவர்கள், இளைஞர்களுக்கும் ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் கொரோனா தடுப்பூசி என்ற செய்தியும் பரவியது. இதனால் மக்கள் மத்தியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. எனவே இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்தே ஒன்றிய அரசு இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி ICMR என்று சொல்லப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது.
தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில், உயிரிழப்பு காரணம் கொரோனா தடுப்பூசி இல்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2021 அக்டோபர் முதல் 2023 மார்ச் வரை நாடு முழுவதும் சுமார் 729 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக்கொண்ட இளைஞர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படுவது நன்றாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் 1 டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு சற்று குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அண்மைக்காலமாக இளைஞர்களுக்கு ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொண்டபோது, உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் தான் என்றும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இளம் வயதினர் உயிரிழப்புகளில் 10% பேருக்கு குடும்ப பின்னணியும், 27% பேருக்கு புகையிலை, போதை பொருள் பழக்கமும், மேலும் 27% பேரின் உயிரிழப்புக்கு மது பழக்கமும் முக்கிய் காரணமாக அமைந்துள்ளதாக ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) தெரிவித்துள்ளது. அதோடு திடீர் மரணங்களுக்கு உடல்நிலை சிக்கலும், வாழ்க்கை முறைகளுமே காரணம் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க சில காலம் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும், ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்றும், இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று தெரிவந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கார்பா நடனமாடி பல பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.