புதுச்சேரியில் 20 வயது இளைஞர் ஒருவர் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து பல நாட்களாக இவருக்கு வயிறு வலி இருந்ததால் மருத்துவரை அணுகியுள்ளார். ஆரம்பத்தில் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதால் அவற்றையும் எடுத்துள்ளார் அந்த இளைஞர். இருப்பினும் அவரது வயிறு வலி நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டது.
இந்த சூழலில் சம்பவத்தன்று அந்த இளைஞர் தொடர் வயிறு வலியால் துடித்துள்ளார். கடுமையாக வலி ஏற்பட்டதால், புதுச்சேரியில் உள்ள ஜெம் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் இரும்பு உலோகத்தில் உள்ள சிறு சிறு பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து சோதனை செய்ததில் அது பிளேடு, ஊக்கு உள்ளிட்டவை என்று தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அதனை வெளியே எடுக்கவில்லை என்றால் விளைவு மோசமாக மாறும் என்று பரிந்துரைத்தனர். பின்னர் அதனை அறுவை சிகிச்சை மூலம் அல்லாமல், எண்டோஸ்கோப்பி மூலம் அகற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.
அதன்படி தேவையான ஏற்பாடுகளை செய்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு எண்டோஸ்கோப்பி மூலமே அவரது வயிற்றில் இருந்து 13 ஹேர்பின்கள், 5 ஊக்குகள், 8 பிளேடுகள் உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்போது அந்த இளைஞர் நலமாக உள்ளார். மருத்துவர்கள் பரிந்துரையின் படியே உணவுகள் எடுத்து கொண்டு வருகிறார்.
அந்த இளைஞருக்கு சிறு வயதில் இருந்து வலிப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வயிறு வலியால் அவதிப்பட்ட இளைஞருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றுக்குள் ஹேர்பின்கள், பிளேடுகள், ஊக்குகள் இருந்ததை கண்ட மருத்துவர்கள் அவருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற விஷயங்களை மன நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் செய்வார்கள் என்றும், எனவே இவ்வாறு யாரேனும் செய்தால் அவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசகரிடம் அழைத்து செல்லுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.