நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களில் விவரங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி குமார் கேட்ரின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.
அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 242 உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் 90 அரசுப் பல்கலைக்கழகங்கள், 140 அரசுத் தனியார் பல்கலைக்கழகங்கள், 8 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை அடங்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் புதியதாக IIT அல்லது IIM திறக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இவரின் இந்த விளக்கத்தின் மூலம் பிரதமர் மோடி பொய் பேசியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது கடந்த மே மாதம் அமெரிக்காவிற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதியதாக IIT அல்லது IIM கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது என பேசினார். இது முற்றிலும் பொய் என்பது ஒன்றிய கல்வி அமைச்சரின் விளக்கம் மூலம் அம்பலப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி எங்குச் சென்றாலும் பொய்யை மட்டுமே பேசி வருவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.