மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 83 நாட்களாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.
மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்குப் பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தடுக்க வந்த சகோதரர் மற்றும் தந்தையை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் ஒன்றிய அரசு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவையை ஒத்திவைத்து வருகிறது. இதனால் ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் ஈகோவை கைவிட்டு விட்டு நாட்டை காப்பாற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், ”மணிப்பூரில் 83 நாட்களாக நீடித்து வரும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். மணிப்பூர் வன்முறை குறித்து மோடி அரசிடம் இருந்து "இந்தியா" பதில் கேட்கிறது.
வடகிழக்கில் நிலைமை பலவீனமாக உள்ளது மற்றும் மணிப்பூர் வன்முறையின் விளைவுகள் மற்ற மாநிலங்களுக்கும் பரவுகிறது. இது நமது உணர்வுப்பூர்வமான எல்லை மாநிலங்களுக்கு நல்லதல்ல. பிரதமர் மோடி தனது ஈகோவைக் களைந்து, மணிப்பூர் மீது நாட்டை நம்பிக்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நிலைமையை மேம்படுத்த, மணிப்பூரில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பதைப் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.