மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 82 நாட்களாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.
மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்குப் பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தடுக்க வந்த சகோதரர் மற்றும் தந்தையை அடித்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் ஒன்றிய அரசு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவையை ஒத்திவைத்து வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர் கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் கொடூரம் குறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், "மணிப்பூரில் அரங்கேறிய கொடூரம் கவலை அடையச் செய்துள்ளது.
இந்த சம்பவம் மிருகத்தனமானது மற்றும் பயங்கரமானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்கா அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் உரியத் தீர்வு காணப்பட வேண்டும். அங்கு உள்ள அனைத்து தரப்பு மக்களின் வீடுகள், வழிபாட்டுத் தளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.