உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தை சேர்ந்த தேஜ்பாலி சிங் படேல் என்பவர் மின்சார லைன்மேனாகப் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் ஏற்படும் மின்பழுதுகளை சரிசெய்து அதற்கான பணத்தையும் வாங்கி அதன்மூலம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், இதே சோன்பத்ரா கிராமத்துக்கு ராஜேந்திரன் என்பவர் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்துள்ளார். இவருக்கும் மின்சாரம் தொடர்பான வேலைகள் தெரியும் என்பதால் தனது உறவினர் வீட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து தந்துள்ளார்.
இவர் குறித்த தகவல் கிராமத்தில் சிலருக்கு தெரியவர அவர்கள் ராஜேந்திரனை தங்கள் வீட்டில் இருந்த மின்பழுத்தை சரிசெய்து தருமாறு கூறியுள்ளனர். அதன்படி, அவரும் அவர்களின் வீடுகளில் இருந்த மின் பிரச்சனைகளை சரி செய்து கொடுத்து அதற்குரிய பணத்தை வாங்கியுள்ளார்.
இது குறித்த தகவல் தேஜ்பாலி சிங் படேலுக்கு தெரிய வந்த நிலையில், இந்த செயல் அவரை ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால் ராஜேந்திரனை தனது நண்பர்களுடன் வழியில் மடக்கிய அவர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை தாக்கி அவருடைய காதுகளைப் பிடித்து உட்காரச் செய்து, தன்னுடைய செருப்பை நக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த வீடியோ அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அவர் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தேஜ்பால் சிங் படேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.