இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் பெண்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவை இந்து பாரதமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையை அமல்படுத்த பா.ஜ.க அரசு தனது ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து வருகிறது. மேலும் பொதுச் சொத்துக்களைத் தனியாருக்கு விற்று வருகிறது.
இதனால் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர்.
இதற்குக் காரணம் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 38% வாக்குகளைப் பெற்றிருந்தது. மீதமுள்ள 62% வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக்கொண்டன. இதனால் தான் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் பா.ஜ.கவை எளிதில் வீழ்த்த முடியும் என கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில் இன்று பாட்னாவில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 17 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதேபோல் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்தி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு எடுத்துள்ளோம். இது ஒரு சிறப்பான கூட்டம். அடுத்த கூட்டம் சிம்லாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும்.
மல்லிகார்ஜூன கார்கே
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள வலிமையான தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். அடுத்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பற்றிய திட்டம் வகுப்பது குறித்தும், ஒவ்வொரு மாநில பிரச்னைகள் குறித்தும் அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
ராகுல் காந்தி
நாட்டின் அடிப்படை விழுமியங்கள் மீது பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் தாக்குதல் நடத்தியுள்ளது. அதை நாம் தடுத்தாக வேண்டும்.
சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி
காந்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி கோட்சேவை இந்தியாவில் ஆட்சியமைக்க வைக்கும் பா.ஜ.கவின் திட்டம் செல்லாது. நமது அரசியலமைப்புச் சட்டம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதனைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
CPI பொதுச் செயலாளர் டி.ராஜா
பா.ஜ.க ஆட்சியில், அரசியல் சாசனம், ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சார்பற்ற தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுவருகிறது. அரசியல் சாசனத்யைக் காக்க பா.ஜ.கவை நீக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றாகப் பணியாற்றுவோம்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவோம் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் வரலாற்றை மாற்ற நினைக்கும் பா.ஜ.கவின் முயற்சியை தடுப்போம். வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் இது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி
புறக்கணிக்கப்பட்டு வரும் ஜனநாயகத்தையும், தாக்குதலுக்கு உள்ளாகி வரும் மதச்சார்பற்ற தன்மையையும் பாதுகாக்க வேண்டும். அதற்காக இன்று அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா
நம்முடைய இந்த போராட்டம் வெறும் அதிகாரத்திற்கானது அல்ல; அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளை காப்பதற்கான போராட்டம்.
லாலு பிரசாத்
அனுமன் கவசத்தை கொண்டு கர்நாடகாவில் பா.ஜ.கவை தகர்த்துவிட்டார். நாட்டின் நிலைமை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக உள்ளது. ஆனால் மோடி அமெரிக்காவிற்கு சந்தனகட்டையோடு செல்கிறார். பா.ஜ.கவை வீழ்த்த அனைவரும் தயாராகிவிட்டனர்.
உத்தவ் தாக்கரே
வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்கள் நாங்கள், ஆனால் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பாதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
சரத்பவார்
பீகாரில் இருந்து தொடங்கிய ஜெயபிரகாஷ் நாரயணன் இயக்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவைப் போலவே எங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக்கும் ஆதரவு கிடைக்கும்.