இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் பெண்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவை இந்து பாரதமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையை அமல்படுத்த பா.ஜ.க அரசு தனது ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து வருகிறது. மேலும் பொதுச் சொத்துக்களைத் தனியாருக்கு விற்று வருகிறது.
இதனால் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர்.
இதற்குக் காரணம் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 38% வாக்குகளைப் பெற்றிருந்தது. மீதமுள்ள 62% வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக்கொண்டன. இதனால் தான் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் பா.ஜ.கவை எளிதில் வீழ்த்த முடியும் என கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில் இன்று பாட்னாவில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 17 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதேபோல் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்தி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவது, தேர்தலில் பா.ஜ.கவை எதிர்க்கும் பொதுசெயல் திட்டத்தை அடுத்த கூட்டத்தில் அறிமுகப்படுத்துவது, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த கூட்டம் சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12ம் தேதி நடைபெறும் என எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்கட்சி கூட்டத்தால் பா.ஜ.கவினர் கலக்கமடைந்துள்ளனர்.