கேரள மாநிலம் மலப்புரம் அடுத்துள்ள திரூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்திக் (58). கோழிக்கோடு மாங்காவு பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இவருக்கு ஷக்கீலா என்ற மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் கடந்த 18ஆம் தேதி சித்திக்கை காணவில்லை. எனவே அவரை எங்கு தேடியும் காணவில்லை என்று கடந்த 22-ம் தேதி அவரது மகன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சித்திக்கை குறித்து விசாரணையை தொடங்கினர். அப்போது கோழிக்கோடு இரிஞ்ஞிப்பாலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அவரது மொபைல் எண் கடைசியாக இருந்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அங்கே சென்று விசாரிக்கையில் கடந்த 18ஆம் தேதி அவர் அந்த ஹோட்டலில் 2 ரூம்களை புக் செய்ததாகவும், அதன் பிறகு அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.
மேலும் அவரது ஏடிஎம்-ல் இருந்து ஒரு பெரிய தொகை எடுக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர், இளைஞருடன் சேர்ந்து டிராலி பேக் எடுத்து செல்வது இடம்பெற்றிருந்தது. இதையடுத்து தொடர்ந்து விசாரிக்கையில் அவர்கள் 2 பேரும் சித்திக்கின் ஹோட்டலில் பணிபுரிந்த சிபிலி (22) என்பதும், பர்ஹானா (18) என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தொடர்ந்து தேடி சென்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆஷிக் இவர்கள் குற்றத்துக்கு உதவிய ஆஷிக் என்பவரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது இவர்கள் மூவரும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் தான் சித்திக்கை கொலை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில், ஹோட்டல் உரிமையாளர் சித்திக்கும், இளம்பெண் பர்ஹானாவின் தந்தையும் நண்பர்கள் என்பதால், நண்பரின் மகளான பர்ஹானாவை தனது ஹோட்டல் வேலைக்கு சேர்த்துள்ளார். இதனிடையே பர்ஹானாவும் மற்றொரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்த சிபிலி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். எனவே பர்ஹானா பரிந்துரையின் பெயரில் சிபிலியும் சித்திக்கின் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார்.
ஒருமுறை பர்ஹானா - சிபிலி காதல் விவகாரம் சித்திக்கிற்கு தெரியவரவே, இரண்டு பேரையும் பணியிலிருந்து நீக்கினார். ஏனெனில் பர்ஹானா மீது சித்திக்கிற்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது பர்ஹானாவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தனக்கு சித்திக் தொல்லைகள் கொடுத்ததாக காதலன் சிபிலியிடம் பர்ஹானா கூறியுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த சிபிலி, அவருக்கு பாடம் கற்றுக்கொடுக்க எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சித்திக்கை தொடர்பு கொண்டு பேசிய பர்ஹானா, அவரை தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இருவரும் தனியார் ஹோட்டல் அறை ஒன்றில் சந்தித்துள்ளனர். அப்போது உள்ளே சென்ற சித்திக்கை அங்கு மறைந்திருந்த சிபிலி தாக்கியுள்ளார்.
மேலும் அவரை நிர்வாணமாக்கி செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திக், அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு, சித்திக்கை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் உயிரிழந்த சித்திக்கை துண்டு துண்டாக வெட்டி, அங்கிருந்த டிராலிக்குள் வைத்து கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஆஷிக் உதவியோடு அதனை வேறொரு பகுதிக்கு கொண்டு சென்று தூக்கி வீசியுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்த தகவலை அடுத்து போலீசார், உடலை தூக்கி போடப்பட்ட பகுதிக்கு சென்று அந்த டிராலியை மீட்டனர். பின்னர் அதில் இருந்த உடல் பாகங்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். சித்திக் இறந்து 1 வார காலத்திற்கு பிறகு அவரது உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. தற்போது அந்த 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.