தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. விவசாயம் செய்து வரும் இவருக்கு பிரணவ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார்.
இதில் பிரணவ்க்கு தலையில் அடிபட்டு புருவத்தில் தசை கிழிந்துள் ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அங்குள்ள ரெயின்போ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் ரத்தத்தை துடைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டியுள்ளனர்.
மகனின் காயத்தில் தையல் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பிரணவ்வின் தந்தை வம்சி தனது மகனை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்களிடம் நடந்ததை கூறிய நிலையில், அவரின் காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காயத்தை பெவிகுயிக்காய் வைத்து ஒட்டியதை கண்டு பிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றவேண்டும் என்று வம்சியிடம் கூறியுள்ளனர். அதற்கு வம்சி ஒப்புக்கொண்டதும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரின் காயத்தில் இருந்த பெவிகுயிக்கை மருத்துவர்கள் அகற்றினர்.
இதன் பின்னர் தன் மகனுக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை வம்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெயின்போ மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.