பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தின் ட்ரைலரிலேயே இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின்னர் இது தவறான தகவல் என்றும் 3 சம்பவங்கள் மட்டுமே இவ்வாறு நடந்துள்ளது என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்த திரைப்படத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்படும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போனதாகவும், இதில் 2019 ஆம் ஆண்டு 9,268 பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்கல் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர், காணாமல்போன சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும், பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், இது போன்ற வழக்குகளில் போலிஸார் மெத்தனமாக செயல்படுவதே இதுபோன்ற சம்பவம் அதிகரிக்க காரணம் என்றும் கூறியுள்ளனர். இது குறித்து விமர்சித்துள்ள குஜராத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிரென் பங்கர், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல் போனதை விட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.